×

ஆண் நண்பருடன் தங்கியிருந்த காஞ்சிபுரம் பெண் அடித்துக்கொலை 3 வாலிபர்கள் கைது செய்யாறில் திருமண மண்டப அறையில்

செய்யாறு, ஏப்.6: செய்யாறில் திருமண மண்டப அறையில் ஆண் நண்பருடன் தங்கியிருந்த காஞ்சிபுரம் பெண் அடித்துக்கொன்று அவரிடமிருந்து செல்போன்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் பல்லவர்மேடு கிழக்கு பகுதி வஉசி தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் சுஜாதா(44). திருமணமாகாத இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கிளினிக்கில் உதவியாளராக வேலை செய்து வந்தார். கிளினிக்கில் பணியாற்றியபோது அங்குள்ள கங்காதரன் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கங்காதரனும், சுஜாதாவும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பஸ் நிலையம் அருகில் உள்ள கொடநகர் பகுதிக்கு வந்தனர்.

பின்னர், அங்குள்ள திருமண மண்டப தங்கும் அறையில் இருவரும் தங்கியிருந்தனர். சிறிது நேரத்தில் இவர்கள் தங்கியிருந்த அறையின் கதவு வேகமாக தட்டும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சுஜாதா கதவை திறந்தார். அப்போது, அங்கு வெளியே நின்றிருந்த 3 பேர் திடீரென உள்ளே புகுந்தனர். பின்னர், அவர்கள் 3 பேரும் சேர்ந்து சுஜாதாவையும், கங்காதரனையும் சரமாரியாக தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த பணம், செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.

இந்த கொலைவெறி தாக்குதலில் படுகாயமடைந்த சுஜாதா மயங்கி கீழே விழுந்தார். அவரை கங்காதரன் மற்றும் திருமண மண்டப ஊழியர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுஜாதா சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, சுஜாதாவின் அண்ணன் சோமசுந்தரம் செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து, நேற்று இந்த கொலையில் தொடர்புடைய கொடநகர் பகுதியை சேர்ந்த அப்பு(40), அவரது நண்பர்களான வெங்கட்ராயன்பேட்டையை சேர்ந்த பார்த்தீபன்(24), டி.எம்.ஆதிகேசவன் தெருவை சேர்ந்த மணி(26) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார். ஆண் நண்பருடன் தங்கியிருந்த பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

The post ஆண் நண்பருடன் தங்கியிருந்த காஞ்சிபுரம் பெண் அடித்துக்கொலை 3 வாலிபர்கள் கைது செய்யாறில் திருமண மண்டப அறையில் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Seyyar ,Kancheepuram ,Velu ,Vausi Street, Kanchipuram Pallavarmedu East.… ,
× RELATED செய்யாறில் இன்று திருமணம் நடக்க...