×

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு சுழற்சி முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடந்தது

நாகர்கோவில், ஏப்.6 : கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு சுழற்சி முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு நேற்று நடைபெற்றது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்களும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 10 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். நாடாளுமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்கள் உள்ளதால் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 10 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதால் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் ஒவ்வொரு வாக்காளர்களும் இரண்டு வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். அந்த தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடிகளில் மூன்று மின்னனு இயந்திரங்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் சுழற்சி முறையில் மின்னனு இயந்திரங்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர்தல் பொதுப்பார்வையாளர் ஷேஷகிரி பாபு முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான தர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இப்பணி நடைபெற்றது. திமுக சார்பில் வர்கீஸ், அதிமுக சார்பில் ஜெயகோபால், பாரதிய ஜனதா சார்பில் மணிகண்டன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் முகவர்கள், சுயேட்சை வேட்பாளர்கள், முகவர்கள் பங்கேற்றனர். வாக்குச்சாவடி வாரியாக மின்னனு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டதையடுத்து அந்த மின்னனு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்து பணி பெல் பொறியாளர்கள் முன்னிலையில் விரைவில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், உதவி ஆட்சியர் பயிற்சி ரஜத் பீட்டன், விளவங்கோடு சட்டமன்ற தேர்தல் அலுவலர் சங்கரலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தூர் ராஜன், உதவி தேர்தல் அலுவலர்கள் காளீஸ்வரி, தமிழரசி, கனகராஜ், சுப்பையா, லொரைட்டா, சுப்புலெட்சுமி, கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் உதவி இயக்குநர் ஊராட்சிகள் சாந்தி, செந்தில்வேல் முருகன், தேர்தல் வட்டாட்சியர் வினோத், துணை வட்டாட்சியர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

The post கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு சுழற்சி முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Nagercoil ,Vilavankode ,Assembly ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...