×

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை திமுக, இந்திய கம்யூனிஸ்ட் விசிக வரவேற்பு: ‘இந்தியா கூட்டணிக்கு வலுச்சேர்க்கும்’

சென்னை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்டு வரவேற்பு தெரிவித்துள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஒன்றிய அரசு பணியிடங்களில் 50 சதவீதம் பெண்களை அமர்த்துதல், மகாலட்சுமி திட்டத்தில் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தபடாது, நீட்தேர்வு என்பது மாநில அரசின் விருப்பம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் வரவேற்கத்தக்கது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து செல்லும் திட்டங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் வலுசேர்க்கும் வகையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. மக்களுக்கு பயனுள்ள பல நல்ல அறிவிப்புகளை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்துள்ளதை திமுக முழுமையாக வரவேற்கிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை 10 ஆண்டுகால ஒன்றிய பாஜ அரசினால் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு தீர்வு காண்கிற வகையில் தேர்தல் அறிக்கை அமைந்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இந்த நம்பிக்கையின் மூலம் மோடி ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி விரைவில் அமையும்.

விசிக தலைவர் திருமாவளவன்: காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை விளிம்புநிலை மக்களுக்கு ஆதரவு அளிக்கும். வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை சீர்செய்யும் அறிக்கை. ஒன்றிய அரசுப்பணியில் பெண்கள் இட ஒதுக்கீடு புரட்சிகரமான திட்டம். இட ஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பை உயர்த்துவது விளிம்பு நிலை மக்களின் வாழ்வை உயர்த்தும் நல்ல திட்டம். இத்தேர்தல் அறிக்கை இந்தியா கூட்டணிக்கு வலுச்சேர்க்கும். தேர்தல் அறிக்கை தான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கை வரவேற்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. ரயில் கட்டணத்தில் முதியோர்களுக்கு சலுகை அளிக்கப்படும் என்று கூறியிருப்பது பயன் அளிக்கும். ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கொடுக்கும் திட்டமும் நல்ல திட்டமே.

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி. பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார்: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை தான் இன்றைக்கு மக்களின் ஹீரோவாக உருவெடுத்துள்ளது. நீட் தேர்வை மாநில அரசு விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதி தமிழ்நாட்டு மக்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது. இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

The post காங்கிரஸ் தேர்தல் அறிக்கை திமுக, இந்திய கம்யூனிஸ்ட் விசிக வரவேற்பு: ‘இந்தியா கூட்டணிக்கு வலுச்சேர்க்கும்’ appeared first on Dinakaran.

Tags : Congress ,DMK ,Indian Communist Party ,India ,CHENNAI ,VISA ,Communist Party of India ,RS Bharati ,Union government ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...