×

ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதால் ஏப்.15 முதல் 19 வரை பள்ளிகள் விடுமுறை: 4-9ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 22, 23ம் தேதி தேர்வு எழுத வரலாம்

சென்னை: தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 1ம் தேதி தொடங்கி 25ம் தேதியுடன் முடிந்தன. மார்ச் 26ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்புக்கான தேர்வு ஏப்ரல் 8ம் தேதியுடன் முடிய உள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக பள்ளியின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டு, முன் கூட்டியே ஏப்ரல் 13ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 11ம் தேதி ரம்ஜான் பண்டிகை என்பதால், 4-9 வகுப்பு மாணவர்களுக்கு 10ம் தேதி மற்றும் 12ம் தேதி நடப்பதாக இருந்த தேர்வுகள் 22, 23ம் தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, கோடை விடுமுறை குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், 1-3 வகுப்புகளுக்கு ஏப்ரல் 5ம் தேதியுடன் ஆண்டு தேர்வுகள் முடிவடையும். 6ம் தேதி முதல் அந்த வகுப்பினருக்கு கோடை விடுமுறையாக கருதலாம். 4-9ம் வகுப்புகளுக்கு 10ம் தேதி மற்றும் 12ம் தேதி நடக்க இருந்த தேர்வுகள் ரம்ஜான் காரணமாக 22, 23ம் தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் அந்த வகுப்பு மாணவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்த பள்ளிக்கு வரவழைக்கலாம்.

அதன்பின் தேர்தல் பணிகளுக்காக ஆசிரியர்கள் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை செல்லலாம். அதனால் அவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை. அதன் தொடர்ச்சியாக 4-8ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை. மீண்டும் 22, 23ம் தேதிகளில் மாணவர்கள் தேர்வு எழுத பள்ளிக்கு வரும் வகையில் அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் 26ம் தேதி வரை பணி நாட்களாக கருதப்படுவதால், தேர்தல் பணி தவிர்த்த நாளில் பள்ளிக்கு வந்து, தேர்வு விடைத்தாள்களை திருத்தி தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகளில் ஈடுபட வேண்டும்.

தற்போது இணைய தள இணைப்பு பெறும் பணி தொடங்க உள்ளதால் அதை பெறும் முயற்சியில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். இணைய தள இணைப்பு வசதிக்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் நிதியின் மூலம் இரண்டாம் கட்ட பள்ளி மானியம் தற்போது பள்ளிக் கல்வி இயக்குநர் மூலமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதால் ஏப்.15 முதல் 19 வரை பள்ளிகள் விடுமுறை: 4-9ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 22, 23ம் தேதி தேர்வு எழுத வரலாம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...