×

நாடாளுமன்ற தேர்தல் பணம் பட்டுவாடா எதிரொலி தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை: பல கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பணம் பட்டுவாடா புகார் எதிரொலியாக, சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.10 லட்சத்திற்கு மேல் பணம் கொண்டு செல்லும் நபர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி தமிழ்நாடு முழுவதும் நேற்று வரை பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.170 கோடிக்கு ரொக்கம் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பல கோடி ரூபாய் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி வருமான வரித்துறை அதிகாரிகள் ேநற்று அதிரடியாக விருகம்பாக்கம் ரத்னா நகர் பகுதியில் வசிக்கும் வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்சியர் தங்கவேலு என்பவரின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புழல் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட காவாங்கரை கண்ணப்பசாமி நகர் மெயின் ரோடு பகுதியில் பாஜவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர் குமார் வீட்டில் ரூ.14 கோடி பணம் பதுக்கி வைத்திருப்பதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி வருமான வரித்துறை உதவி கமிஷனர் கல்யாணசுந்தரம் தலைமையில் வருமான வரித்துறை ஆய்வாளர்கள் சுரேஷ், அசோக்குமார் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் இந்த சோதனையில் ஆவணங்கள் மட்டும் சிக்கியதாகவும், பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் அதிமுக பிரமுகர் ஆர்.எஸ்.முருகன் வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதேபோல், சேலம், கோவை, திருச்சி, நெல்லை என தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தல் பணம் பட்டுவாடா எதிரொலி தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை: பல கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Income tax ,Tamil Nadu ,CHENNAI ,Income Tax department ,
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...