இளையான்குடி, ஏப். 6: இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் பெருந்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி பெருந் திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச் 28ம் தேதி காப்புகட்டுதழ் நிகழ்சியும், அதனை தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெற்றது. 10 நாள் திருவிழாவில் 7ம் நாளான நேற்று முன்தினம் பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நாளான நேற்று மின்சார தீப அலங்கார தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு புறப்பட்ட தேர், பக்தர்கள் மத்தியில் கோயிலைச் சுற்றி இரவு 9 மணிக்கு நிலை வந்தடைந்தது. தேரோட்டத்தை கானவும், அம்மனை தரிசிக்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 2 லட்சம் பக்தர்கள் வந்திருந்தனர். திருவிழாவில் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, தீ தட்டு, வேல் குத்துதல், பறவை மாவிளக்கு உட்பட நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (ஏப். 6) காலை 7 மணிக்கு பால்குடம், மாலை 5 மணிக்கு ஊஞ்சல், இரவு 10 மணிக்கு புஷ்ப பல்லக்கு நடைபெறுகிறது. நாளை இரவு 7 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.