×

சென்னை அணியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஐதராபாத்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ரச்சின் ரவிந்திரா, கேப்டன் ருதுராஜ் இணைந்து சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர். ரச்சின் 12 ரன் எடுத்து புவனேஷ்வர் வேகத்தில் மார்க்ரம் வசம் பிடிபட்டார். ருதுராஜ் 26 ரன் (21 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஷாபாஸ் அகமது பந்துவீச்சில் அப்துல் சமத் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

சென்னை அணி 7.1 ஓவரில் 54 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ரகானே – ஷிவம் துபே இணைந்து அதிரடியில் இறங்க, சூப்பர் கிங்ஸ் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்தனர். ஷிவம் துபே 45 ரன் (24 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி கம்மின்ஸ் வேகத்தில் புவனேஷ்வர் வசம் பிடிபட்டார். ரகானே 35 ரன் (30 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி உனத்கட் பந்துவீச்சில் மார்கண்டே வசம் பிடிபட, சென்னை 15 ஓவரில் 127 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து மீண்டும் சரிவை சந்தித்தது. டேரில் மிட்செல் 13 ரன் எடுத்து நடராஜன் வேகத்தில் அப்துல் சமத் வசம் பிடிபட்டார். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன் குவித்தது. ஜடேஜா 31 ரன் (23 பந்து, 4 பவுண்டரி), தோனி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் புவனேஷ்வர், நடராஜன், கம்மின்ஸ், ஷாபாஸ், உனத்கட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து, நடப்பு தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்தது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா, இரண்டாவது ஓவரிலேயே ஜெட் வேகம் எடுத்தார். அந்த ஓவரில் மட்டும் 27 ரன்களை குவித்தார். 12 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரி அடித்த பின் தீபக் சாகர் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். மர்க்ரம் அதிகபட்சமாக 50 ரன் (36 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), எடுத்தார். கலாசன், நிதிஷ் ரெட்டி இருவரும் அவுட் ஆகாமல் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தனர். இதன் மூலம் சன்ரைசர்ஸ் 4 புள்ளிகளுடன் 5 வது இடத்துக்கு முன்னேறி அசத்தியது.

The post சென்னை அணியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் appeared first on Dinakaran.

Tags : Sunrisers Hyderabad ,Chennai ,Hyderabad ,IPL league ,Chennai Super Kings ,Rajiv Gandhi Stadium ,Sunrisers ,Pat Cummins ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை...