×

சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டில் பாஜவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்: விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

விழுப்புரம்: பா.ஜ.க. வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு. ஒரே ஒரே என்று ஒரேயடியாக நாட்டை நாசமாக்கிவிடுவார்கள். பா.ஜ.க.வுக்கு சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் விழுப்புரம் வேட்பாளர் ரவிக்குமார், கடலூர் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாட்டை நிர்வகிக்கும், ஒன்றிய அரசு செயலாளர்களில் 3 விழுக்காடு கூட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் இல்லை. அதேபோல், ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இருக்கும் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் போன்ற பணிகளில் இப்போதும் இதர பிறப்படுத்தப்பட்ட சமூகங்களையும் பட்டியலின, பழங்குடியின சமூகங்களையும் சேர்ந்தவர்கள் இடஒதுக்கீடு முறையில் தேர்வாவது இல்லை. பா.ஜ.க.. இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து உண்டாக்குகிறார்கள். பா.ஜ.க. மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் இடஒதுக்கீடு முறை இருக்காது. சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டிவிடுவார்கள்.

இப்போது நம்முடைய முழக்கம் தேசிய இயக்கங்களில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. நம்முடைய கோரிக்கையை ஏற்று, காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், ராகுல் காந்தி என்ன அறிவித்திருக்கிறார். ‘‘இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், நாடு முழுவதும் சமூக பொருளாதார – சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும். ஒன்றியத்தில் இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 விழுக்காடு என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும். எஸ்சி, எஸ்டி,பிசி பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்கு ஆக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை நம்முடைய நாட்டைப் படுகுழியில் தள்ளிய பா.ஜ.க.விடமிருந்து மீட்கும் தேர்தல் அறிக்கை. நூறாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல பா.ஜ.க. தீட்டியிருக்கும் திட்டங்களுக்குத் தடைபோடும் தேர்தல் அறிக்கை. இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டுபோய் மீண்டும் வளர்ச்சியை ஏற்படுத்த இருக்கும் தேர்தல் அறிக்கை. பா.ஜ.க. இதுபோல வாக்குறுதி கொடுத்திருக்கிறதா?
ஒரு கிராமத்தில் ஐந்நூறு பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வருகிறது என்றால் அந்த ஊருக்குள் ஐந்து லட்சம் ரூபாய் வருகிறது என்று பொருள். இதன் மூலமாக அந்தக் கிராமத்தில் பணப்புழக்கம் அதிகமாகிறது.

கிராமப் பொருளாதாரமும் வளர்கிறது. ஆனால், நம்முடைய ஆட்சியைக் குறைசொல்லி ஒருவர் பேசிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு ஊரில் வைத்திருக்கும் பெயர், பாதம்தாங்கி பழனிசாமி. உரிமைத்தொகையை நாம் அறிவித்ததும் என்னவெல்லாம் பேசினார் இந்த பழனிசாமி? தி.மு.க. கொடுக்க மாட்டார்கள். ஏமாற்றிவிடுவார்கள் என்று பிரச்சாரம் செய்தார். இப்போது வெட்கமே இல்லாமல் பொய் பேசுகிறார். தமிழ்நாட்டு மக்களுக்குத் தமிழில் வணக்கம் சொன்னால்போதும், வேட்டி கட்டினால்போதும், இட்லி பிடிக்கும் பொங்கல் பிடிக்கும் என்று சொன்னால்போதும் என்று நினைத்துக் கொண்டு வருகிறார் பிரதமர் மோடி.

மக்களுக்குத் தேவையான நேரத்தில் உதவி செய்பவர்களைத்தான் மக்கள் நினைத்துப் பார்ப்பார்கள். மக்களை மதிக்கவில்லை என்றால், அவர்களும் மதிக்க மாட்டார்கள். மோடி அவர்களே… மீண்டும் மீண்டும் நீங்கள் எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் தமிழ்நாட்டை பா.ஜ.க. கைப்பற்றவே முடியாது. இது பெரியார் மண், அண்ணாவின் மண், தலைவர் கலைஞருடைய மண். திமுக இருக்கும்வரை உங்கள் எண்ணம் பலிக்கவே பலிக்காது. பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களித்தால், நாடெங்கும் மதவெறி ஊட்டப்பட்டு, எங்குப் பார்த்தாலும் மதக்கலவரம் என்ற நிலைமை உருவாகும்.

மக்களைப் பிளவுப்படுத்தி வேற்றுமைகளும் – அடிமைத்தனமும் நிறைந்த சமூகத்தை மீண்டும் உருவாக்க அரசியல்சட்டத்தை மாற்றுவார்கள். படிப்பதால்தான் இவர்கள் உரிமைகளைக் கேட்கிறார்கள் என்று கல்வியை நம்மிடம் இருந்து பறிப்பார்கள். மக்களைச் சிந்திக்க விடாமல் தடுக்க வரலாற்றை, பொய்களால் மாற்றி எழுதுவார்கள். மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து மாநிலங்களை நகராட்சிகள் போன்று நடத்துவார்கள். மாநிலங்களில் இருக்கும் மக்கள், சிறிய பிரச்சினைக்குக்கூட ஒன்றிய அரசை எதிர்பார்த்து நிற்கும் நிலைமை உருவாகிவிடும். மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, ஆளுநர்கள் மூலமாக செயல்படவிடாமல் தடுத்து, போட்டி அரசாங்கம் நடத்துவார்கள்.

சொந்தங்களாக வாழும் இஸ்லாமிய கிறிஸ்துவர்களை, இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றி, அவர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பார்கள். ஒரே நாடு ஒரே கலாச்சாரம் ஒரே மொழி ஒரே மதம் ஒரே தேர்தல் ஒரே ரேஷன் கார்டு ஒரே உணவு ஒரே அரசு ஒரே கட்சி ஒரே தலைவர் என்று ஒரே ஒரே – என்று ஒரேயடியாக நாட்டை நாசமாக்கிவிடுவார்கள். பா.ஜ.க.வின் திட்டங்கள் மிக மிக மோசமானது. இந்த விடுதலைப் போரில் இந்திய மக்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், எதிரிகளை அடையாளம் காண்பது மட்டுமல்ல துரோகிகளையும் சேர்த்தே அடையாளம் காண வேண்டும். எதிரிகளையும் – துரோகிகளையும் விரட்டியடிக்க வேண்டும். பா.ஜ.க.வுக்கு சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் தக்க பாடம் புகட்ட வேண்டும். எனவே, தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. அதற்குத் துணைபோகும் பா.ம.க. – தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. ஆகிய துரோகக் கட்சிகளை ஒருசேர வீழ்த்துங்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டில் பாஜவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்: விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,Chief Minister ,M.K.Stal ,Villupuram ,M. K. Stalin ,Villupuram District ,Vikravandi ,
× RELATED பாஜ ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம்...