திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கரிடம் தொழுவூர் கிராம மக்கள் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு: திருவள்ளூர் அடுத்த தொழுவூர் கிராமத்தில் சர்வே எண்.598, 599ல் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிக்காக மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் மண் எடுப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஏரியில் மண் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் ஒரு நாளைக்கு சுமார் 150க்கும் மேல் கனரக லாரிகளில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை தோராயமாக 5 ஆயிரம் கனரக லாரிகளில் மண் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் கனிமவளத்துறையின் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கனரக லாரிகளில் மண் எடுத்துச் செல்லும்போது தார்ப்பாய் போட்டு மூடப்படாமல் மண் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த மண்ணை எடுத்துச் செல்லும் லாரிகளுக்கு நடை ரசீதும் இல்லை. மேலும் தேசிய நெடுஞ்சாலைப் பணியை தவிர்த்து கள்ளச் சந்தையிலும் தனி நபர்களுக்கு கனரக லாரிகளில் மண் விற்கப்படுகிறது. தமிழக அரசின் கனிம வள விதிமுறைப்படி 3 அடி ஆழத்திற்கு ஏரியிலிருந்து மண் எடுக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக சுமார் 6 அடிக்கு ஆழத்திற்கு மேல் ஏரியிலிருந்து மண் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீளமும், அகலமும் குறிப்பிட்ட அளவுபடி இல்லாமல் அதிகமாக மண் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே தொழுவூர் கிராம பொதுமக்கள் சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி நேரிலும், 8ம் தேதி பதிவு தபால் மூலமாகவும் மாவட்ட கலெக்டருக்கு புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எந்த ஒரு பதில் தகவலும் கொடுக்கவில்லை. மேலும் எந்தவித சட்ட நடவடிக்கையும் மனுமீது எடுக்கவில்லை. எனவே தமிழக அரசின் கனிம வளத்துறையின் விதிகளை மீறி தொழுவூர் ஏரியில் மண் எடுக்கப்படுவதால், மாவட்ட கலெக்டரின் அனுமதி உத்தரவை ரத்து செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
The post தொழுவூர் கிராம ஏரியில் தேசிய நெடுஞ்சாலை பணிக்கு மண் எடுப்பதில் விதிமீறல்: கலெக்டர் அலுவலகத்தில் புகார் appeared first on Dinakaran.