×

பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு வாக்குச்சாவடி இடமாற்றத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு: அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே வாக்குச்சாவடி மையம் இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு எற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கொத்தகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 74 ஏவி எண் கொண்ட வாக்குச்சாவடி மையத்தில் 1200 வாக்காளர்கள் வாக்கு உரிமம் பெற்றுள்ளனர். இந்நிலையில் அப்பள்ளியில் பழைய கட்டிடம் அகற்றப்பட்டு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதனால் பாத்தகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குசாவடி மையத்தை மாற்றி அமைக்க வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று கொத்தகுப்பம் பழைய வாக்குச்சாவடி பள்ளி முன்பு திரண்டு வாக்குச்சாவடி மாற்றம் செய்வதை கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த பள்ளிப்பட்டு வட்டாட்சியர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் ராமு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பழைய பள்ளி கட்டிடம் பலவீனமாக உள்ளதாலும், வாக்குச்சாவடி அமைக்க முடியாத நிலையில் வேறு இடத்திற்கு மாற்றம் செய்துள்ளதாக தெரிவித்தனர். இருப்பினும் கிராம மக்கள் 2 கி.மீ தூரம் சென்று வாக்களிக்க முடியாது என்பதால், கொத்தகுப்பம் பள்ளியில் சீரமைப்பு பணிகள் செய்துள்ளதாகவும், வாக்குச்சாவடி மையத்தை மாற்றக்கூடாது என கூறினர்.

கோரிக்கையை அதிகாரிகள் ஏற்க மறுத்து விட்டதால், பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. வாக்குச்சாவடி மையத்தை வேறு இடத்திற்கு மாற்றினால், நாடாளுமன்ற தேர்தலை கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்போம் என அவர்கள் தெரிவித்தனர்.

The post பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு வாக்குச்சாவடி இடமாற்றத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு: அதிகாரிகளுடன் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Pallipatu ,Pallipattu ,Tiruvallur District ,Kothakuppam Panchayat Union Middle School ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் இரு தரப்பினரிடையே மோதல்: 5 வாலிபர்கள் கைது