×

10 ஆண்டுகளாக நஷ்டஈடு வழங்காத தொழிற்சாலையை கண்டித்து மறியல்: போலீசார் சமரசம்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, மீஞ்சூர் அடுத்த செப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு 77 குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்நிலையில், வட சென்னை அனல்மின் நிலையம் பகுதி – 1 விரிவு படுத்தவும், சாம்பல் கொட்டும் பணிக்காக அங்கு வசித்து வந்த மக்களிடம் அனல்மின் நிலையம் கேட்டது. அதற்கு பதிலாக வேறு இடத்தில் வீட்டுமனை மற்றும் குடும்பத்தில் ஒரு நபருக்கு அனல்மின் நிலையத்தில் வேலை பெற்று தருவதாகவும் ஒப்புக் கொண்டனர்.

இதில் 77 பேருக்கு மாற்று வீட்டுமனை செப்பாக்கம் கிராமத்தில் 1993ம் ஆண்டு மின்வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டது. கிராம மக்கள் பெயரில்தான் பட்டா மற்றும் வீட்டுமனைக்கான ஆணை, வில்லாங்க சான்றுகளும் உள்ளது. மீஞ்சூர் அடுத்த செப்பாக்கம் கிராமம் அருகில் உள்ள நந்தியம்பாக்கம், போர்ட் ரோடு பகுதியில். தனியார் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பெரிய பெரிய கனரக வாகனங்கள் அனைத்தும் மீஞ்சூர் வழியை பயன்படுத்தாமல் கிராம மக்களுக்காக வழங்கப்பட்டுள்ள வீட்டு மனை வழியாக சென்று வர பயன்படுத்தி வந்தனர்.

அப்படி செல்லும் நிறுவனத்தார்க்கு மிகவும் எளிதாக இருந்துள்ளது. எனவே, இந்த தொழிற்சாலை அந்த இடத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தினர். மேலும், அங்கிருந்த 77 குடும்பத்தினருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் நஷ்ட ஈடு வழங்குவதாக கூறியிருந்தது. ஆனால் இதுவரை அவர்கள் கூறிய தொகை மற்றும் நிலம் கொடுத்த உரிமையாளர்களுக்கு கொடுக்கவில்லை. இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்துள்ளனர். தற்போது இவர்கள் வெவ்வேறு பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. இதனை தொடந்து, பாதிக்கப்பட்ட அந்த மக்கள் திடீரென ஒன்று திரண்டு நேற்று மதியம் அந்த வழியாக சென்ற தொழிற்சாலைக்கு சொந்தமான லாரியை வழி மறித்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இன்னும் ஒரு வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அதன் பின்னர் உங்கள் கோரிக்கையை நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து, மறியல் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பரபரப்பு ஏற்பட்டது .

The post 10 ஆண்டுகளாக நஷ்டஈடு வழங்காத தொழிற்சாலையை கண்டித்து மறியல்: போலீசார் சமரசம் appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Tiruvallur district ,Ponneri taluka ,Meenjur ,Cheppakkam village ,North Chennai Power Station Part ,
× RELATED மீஞ்சூரில் தலை, கைகள் துண்டித்து...