×

வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக விதிமுறை வகுக்கக்கோரி திமுக, காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து சந்தேகம் எழுப்பி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்கால தேர்தலை கருத்தில் கொண்டு தான் என தெரிவிக்கப்பட்டதால், வழக்கின் விசாரணையை ஜூன் 25ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், சமீப காலமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்பாடு குறித்து சமூகத்தின் அனைத்து பிரிவினரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும், வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் இடையில் அச்சு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை இணைப்பது தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணானது. இது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே, வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும், கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும் இடையில் அச்சு இயந்திரத்தை வைக்க கூடாது என்று உத்தரவிட வேண்டும் கோரப்பட்டிருந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.பி.சூரியபிரகாசம், வி.இசட்.விக்டர் ஆஜராகினர்.

மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடும்போது, ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டை எண்ணுவது குறித்து தேர்தல் அதிகாரி முடிவெடுக்க அதிகாரம் உள்ள போதும், அது சம்பந்தமான விதிகள் ஏதும் இல்லை என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளதேன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர், எதிர்கால தேர்தல்களை கருத்தில் கொண்டு தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், மூன்றாம் தலைமுறை வாக்குப்பதிவு இயந்திரம் 2013ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இதே இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. அந்த தேர்தலில் மனுதாரர் கட்சி வெற்றி பெற்றது. இந்த வழக்கை ஏற்றால் அது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர்கள் தரப்பில், தற்போதைய தேர்தலுக்காக இந்த வழக்கை தாக்கல் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் வழக்கை பின்னர் பரிசீலிக்கலாம் எனக் கூறி விசாரணையை ஜூன் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக விதிமுறை வகுக்கக்கோரி திமுக, காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DMK ,Congress ,Chennai ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி