×

‘பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாமா’? 10 ஆண்டில் பாஜ அமைச்சர்கள் 72 பேர் மீது குண்டூசி அளவுக்கு கூட ஊழல் புகார் இல்லையாம்…. அண்ணாமலை காமெடி

நாமக்கல் நாடாளுமன்ற பாஜ வேட்பாளர் கேபி.ராமலிங்கத்தை ஆதரித்து வெண்ணந்தூர் பகுதியில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: உண்மையான சமூக நீதியை பாஜ அரசு வழங்கி வருகிறது. இந்திய ஜனநாயகம் என்றாலே லஞ்சம் என்பதை மாற்றி, கடந்த 10 ஆண்டுகளில் 72 அமைச்சர்கள் மீது குண்டூசி அளவுக்கு கூட ஊழல் இல்லாமல் ஆட்சி நடத்தியுள்ளார் மோடி. இத்தொகுதியில் பாஜ தேர்ந்தெடுக்கப்பட்டால் நாமக்கல்லில் முட்டை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படும். அதேபோல வெண்ணந்தூர் பகுதியில் ஜவுளி உற்பத்தியிலும் சிறுசிறு பிரச்னைகள் இருக்கின்றன. அவைகளை தீர்க்க மோடி அரசு முயற்சித்து வருகிறது. மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் அவைகள் சரி செய்யப்படும். பா.ஜ., பொறுப்பேற்றவுடன் கண்டிப்பாக காவிரியுடன் திருமணிமுத்தாறை இணைப்போம். அதேபோல், வேளாண் பொருட்களுக்கு ஏற்றுமதி மையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். அண்ணாமலையின் இந்த பேச்சை பகிர்ந்த நெட்டிசன்கள், ‘பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாமா?’ என்று கிண்டலடித்து வருகின்றனர்.

இந்த ஊழல், கிரிமினல் வழக்குகள் யாருடையது?
* தேர்தல் பத்திரம்,பிஎம் கேர் ஊழல்
* சிஏஜி வெளியிட்ட ரூ.7.5 லட்சம் கோடி ஊழல்
* ரபேல் விமான ஊழல்
* 33 ஒன்றிய அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கு
* 44 பாஜ எம்பிக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு
* அதானி, அம்பானிக்காக கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்களில் முறைகேடு – இப்படி லிஸ்ட் நிறைய உள்ளது. இந்த ஊழல், முறைகேடுகள் எல்லாம் அமைச்சர்கள் ஆதரவின்றி நடக்க வாய்ப்பே இல்லை. உண்மை இவ்வாறு இருக்க முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல அண்ணாமலை பேசி உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்து உள்ளன.

* ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது பிடித்ததைவிட பாஜவில் அதிக திருடர்களை அண்ணாமலை சேத்து இருக்காரு: ஜி.ராமகிருஷ்ணன் ‘கிழி’
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகில் நேற்று முன்தினம் நடந்தது. கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மா.கம்யூ., அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேசியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளாக மோடி அரசுக்கு ஜால்ரா அடித்தவர் எடப்பாடி பழனிசாமி. அண்ணாமலை காவல்துறையில் இருந்தபோது பிடித்த திருடர்களை விட பாஜ மாநில தலைவரான பிறகுதான் அதிக திருடர்களை பிடித்து கட்சியில் இணைத்து உள்ளார். இப்படிப்பட்ட கூட்டணியில்தான் பாமக உள்ளது. பாஜவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாமக சந்தர்ப்பவாத கட்சியாக உள்ளது.இந்தியாவில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்துவோம் என பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து கடந்த பத்து ஆண்டுகளாக பொதுமக்களை ஏமாற்றி வரும் பாஜ அரசுக்கு வாக்களிக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

* நல்ல வார்த்தை பேசுனா மழை வருமா? அப்படினா அண்ணாமலைக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்… செல்லூர் ராஜூ நெத்தியடி
மதுரை, பெத்தானியாபுரம் பகுதியில் அதிமுக தேர்தல் பணிமனையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் நல்ல வார்த்தை பேசினால் மழை பெய்யும் என அண்ணாமலை கூறுகிறார். எல்லோரும் என்னை தெர்மாகோல் ராஜூ என்று கிண்டல் கேலி செய்தீர்கள். நான் நல்ல வார்த்தை பேசுனா மழை வரும் என்று அண்ணாமலை சொல்றாரு. பேசுனா மழை வரும் என்றால் பேசிக் கொண்டே இருக்கலாமே? இதற்காகவே அண்ணாமலைக்கு நோபல் பரிசு கொடுக்கலாமே? இது எல்லாம் சும்மா? அவர் எதோ பேசனும்கிறதுக்காக பேசுகிறார். அண்ணாமலையை பற்றி தவறான வார்த்தையை நான் சொல்லவில்லை. அவர்தான் ஜெயலலிதா பற்றி கேவலமாக பேசினார். அண்ணா, தந்தை பெரியாரை பற்றியும் பேசினார். அப்போதே நான் சொன்னேன் இந்த மாதிரி வாய் துடுக்காக பேசுக்கூடாது. மறைந்த தலைவர்களை ஒரு பாஜ மாநில தலைவர் இப்படி பேசலாமா என்று தான் சொன்னேன். இதில் என்ன தவறு? என்ன வார்த்தை தவறுதலாக இருக்கிறது. ஜெயலலிதாவை காட்டிலும் எனது மனைவி 100 மடங்கு, என் அம்மா ஆயிரம் மடங்கு உயர்ந்தவங்க என்றார். இப்படி சொன்னால் யார் பொறுத்துகிட்டு இருப்பாங்க. எங்கள் கட்சிக்கு அண்ணாவின் பெயரை வைத்திருக்கோம். அவரை பற்றி கொச்சைப்படுத்தி பேசினால் எப்படி பொறுமையாக இருப்போம் அதுக்காக நான் அவரை தவறாக எந்த வார்த்தையும் பேசவில்லை.
இவ்வாறு பேசினார்.

* சாலையில் கற்களை கொட்டி பாரிவேந்தருக்கு எதிர்ப்பு: மாற்று வழியில் எஸ்கேப்பானாலும் கேட் போட்ட வாலிபர்கள்
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் பாஜ கூட்டணியில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் முசிறி அருகே உள்ள காமாட்சிபட்டியில் பிரசாரத்தை முடித்து விட்டு தண்டலைபுத்தூருக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வேளகாநத்தம் அருகே பாரிவேந்தர் வரும் சாலையில் புரட்சி முத்தரையர் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் கற்களை வைத்து மறித்தனர். பிறகு பாரிவேந்தரின் உதவியாளர்கள் சென்று வாலிபர்களிடம் சாலையில் கற்களை வைத்து எதற்காக மறிக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு இளைஞர்கள், கடந்த 25ம் தேதி பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மூவானூர், வேங்கைமண்டலத்தில் இருந்து ஆதரவாளர்களை அழைத்து கொண்டு சென்றோம். அம்மாபாளையம் அருகே சென்றபோது விபத்து ஏற்பட்டு 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆனால், தற்போது வரை காயமடைந்தவர்களின் உடல்நலம் குறித்து பாரிவேந்தர் தரப்பிலிருந்து யாரும் விசாரிக்கவில்லை. எவ்வித மருத்துவ உதவியும் செய்யவில்லை என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பிரசார வாகனத்தில் இருந்து பாரிவேந்தர் இறங்கி வந்து இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எஸ்ஆர்எம் மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம். இதற்கு நாளை (இன்று) உரிய தீர்வு எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து சாலையில் போட்ட கற்களை இளைஞர்கள் அகற்றினர். இதைத் தொடர்ந்து தண்டலைபுத்தூரில் பாரிவேந்தர் பிரசாரம் செய்து விட்டு சென்றார்.
முன்னதாக முசிறி அருகே உள்ள காமாட்சிப்பட்டியில் இருந்து வேட்பாளர் பாரிவேந்தர் செல்லும்போது இளைஞர்கள் வழிமறிக்க உள்ளதாக தகவல் கிடைத்தது. இதனால் மாற்று வழியான மண் சாலையில் பாரிவேந்தர் சென்றார். இதையறிந்த இளைஞர்கள், மண் சாலையில் கற்களை குறுக்கே போட்டு பாரிவேந்தரை வழிமறித்துள்ளனர்.

* ஒரே ஒரு குருக்கள் வர்றார்…
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பாக்கியலட்சுமி என்பவர் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு சிறிதும் தொடர்பில்லாத திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த இவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நேற்று பெரணமல்லூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, பிரசார வாகனத்தில் வேட்பாளருடன் ஆதரவாளர் ஒருவர் மட்டுமே ‘மைக்’ சின்னத்தை பிடித்து கொண்டு வந்தார். கட்சி நிர்வாகிகளோ, தொண்டர்களோ அவர்களுடன் இல்லை. இவர்கள் இருவர் மட்டுமே பெரணமல்லூர் பகுதியை சுற்றி சுற்றி வந்தனர். அப்போது, கடைவீதியில் இருந்த பொதுமக்கள், `யார் இவர்கள், எந்த வேட்பாளருக்காக ஓட்டு கேட்டு வருகிறார்கள்? என கேள்வி எழுப்பியபடி பிரசார வாகனத்தில் உள்ள பேனரை பார்த்தனர்.
அந்த பேனரில் உள்ள வேட்பாளர் படமும், பிரசார வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர் படமும் ஒன்றாக இருப்பதை பார்த்தனர். அப்போது தான் தெரிந்தது அவர் நாதக வேட்பாளர் என்பதும் தனக்காக ஓட்டு கேட்டு வந்துள்ளார் என்பதும் பிரதான கட்சிகளுக்கு டப் கொடுப்போம் என்ற வகையில் வேட்பாளர் மற்றும் ஒரேயொரு ஆதரவாளர் என இருவர் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டதை மக்கள் வேடிக்கையாக பார்த்தனர்.

The post ‘பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாமா’? 10 ஆண்டில் பாஜ அமைச்சர்கள் 72 பேர் மீது குண்டூசி அளவுக்கு கூட ஊழல் புகார் இல்லையாம்…. அண்ணாமலை காமெடி appeared first on Dinakaran.

Tags : BJP ,Kundusi ,State ,President ,Annamalai ,Vennandur ,Namakkal Parliamentary ,KP Ramalingam ,BJP government ,
× RELATED தேவகவுடா பேரன் பிரஜ்வால் ஆபாச வீடியோ : 2023-ல் பாஜக நிர்வாகி கடிதம்