×

பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி பகுதிகளில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

ஊத்துக்கோட்டை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி பெரியபாளையம், ஆரணி பகுதிகளில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு மற்றும் பதட்டமான வாக்குசாவடிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில் வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மகளிர் குழுக்கள், பிரசார வாகனங்கள் மூலம் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு மற்றும் பதட்டமான வாக்கு சாவடிகளுக்கு சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் மாவட்ட எஸ்.பி. சீனிவாசபெருமாள் உத்தரவிட்டார்.

அதன்பேரில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் தலைமையில், டிஎஸ்பி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள ஊத்துக்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் கொடி அணிவகுப்பு நடந்தது. பெரியபாளையம், ஆரணி, வெங்கல், பென்னாலூர்பேட்டை ஆகிய 4 காவல் நிலைய எல்லை பகுதிகளில் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் பதட்டமான வாக்கு சாவடிகளுக்கு டிஎஸ்பி கணேஷ்குமார் மற்றும் துணை ராணுவத்தினர் பெரியபாளையம் அருகே மெய்யூர், மாளந்தூர், ஆவாஜிப்பேட்டை, சின்னம்பேடு, புன்னப்பாக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள பதட்டமான மற்றும் மிகவும் பதட்டமான வாக்குசாவடிகளாக கருதப்படும் 4 வாக்கு சாவடிகளில், அங்கு வாக்களிக்கும் வாக்காளர்களை அழைத்து அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்.

அப்படி யாராவது உங்களை மிரட்டினால் எங்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் ஓட்டுக்கு பணம் வாங்ககூடாது எனவும் வலியுறுத்தினர். பின்னர் சென்னை – திருப்பதி சாலையில் உள்ள பெரியபாளையம் மும்முனை சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர். இதில் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

பொன்னேரி: நேற்றுமுன்தினம் மாலை செங்குன்றம் காவல் மாவட்டத்தின் சார்பில் உதவி கமிஷனர் சபாபதி மற்றும் துணை கமாண்டர் அரவிந்த் குமார் தலைமையில் மத்திய பாதுகாப்பு படை போலீசாருடன் பொன்னேரியின் முக்கிய சாலைகளிலும் பேருந்து நிலையம், வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

மக்கள் யாருக்கும் பயப்படாமல் அச்சமின்றி தங்களுடைய ஜனநாயக கடமையையாற்றிட வேண்டும் என்பதை வலியறுத்தும் விதமாகவும், அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் உள்ளதை வெளிப்படுத்தும் விதமாகவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

The post பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி பகுதிகளில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Paramilitary flag parade ,Periyapalayam, Arani, Ponneri ,Uthukkottai ,Periyapalayam ,Arani ,paramilitary flag ,Tamil Nadu ,
× RELATED துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு