×

தனியார் கடல்சார் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் ரூ.35 லட்சம் மோசடி: முன்னாள் ஊழியர் கைது

சோழிங்கநல்லூர்: தனியார் கடல்சார் கல்லூரி மாணவர் சேர்க்கை மற்றும் கல்லூரி கட்டணத்தில் போலி ரசீதுகள் மூலம் ரூ.35 லட்சம் மோசடி செய்த, முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் சதர்ன் அகாடமி மற்றும் மாரிடைம் ஸ்டடிஸ் என்ற பெயரில் கடல்சார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியின் தலைமை அலுவலகம் மயிலாப்பூர் ஆர்.கே.சாலையில் உள்ளது.

இங்கு, கணக்காளராக காமினி (28) மற்றும் விளம்பர அதிகாரியாக வெங்கடேசன் (42) ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கல்லூரியின் ஆண்டு வருவாய் கணக்கை ஆய்வு செய்தபோது, மாணவர் சேர்க்கை மற்றும் கல்லூரி கட்டணத்தில் இருவரும் போலி ரசீதுகள் மூலம் ரூ.35 லட்சம் வரை போலி கணக்குகள் காட்டி மோசடி செய்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கல்லூரியின் நிர்வாக அதிகாரி அசோகன், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் உரிய ஆவணங்களுடன் புகார் அளித்தார். அதன்பேரில், விசாரணை நடத்திய போது, ரூ.35 லட்சத்தை கணக்காளர் காமினி மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மோசடி செய்தது உறுதியானது.

அதைதொடர்ந்து போலீசார் இருவர் மீதும் ஐபிசி 406 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தங்கள் மீது வழக்கு பதிவு செய்த தகவல் அறிந்த பெண் கணக்காளர் உள்பட 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இதற்கிடையே, தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் திருவொற்றியூர் சின்ன மேட்டுப்பாளையம் 5வது தெருவை சேர்ந்த வெங்கடேசனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தலைமறைவாக உள்ள காமினியை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post தனியார் கடல்சார் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் ரூ.35 லட்சம் மோசடி: முன்னாள் ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Choshinganallur ,Southern Academy and Maritime Studies ,Oothukottai ,Tiruvallur ,
× RELATED அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர்...