மாமல்லபுரம்: மாமல்லபுரம் புராதன சின்னங்கள் வளாக பகுதியில் மர்ம நபர்கள் உள்ளே செல்வதை தடுக்கும் வகையில் உயரமான கம்பி வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்கள் செதுக்கிய கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்நாட்டு பயணிகளுக்கு 40 ரூபாயும், வெளிநாட்டு பயணிகளுக்கு 600 ரூபாயும் தொல்லியல் துறை நிர்வாகம் மூலம் வசூலிக்கப்படுகிறது. மேலும், புராதன சின்னங்களை பாதுகாக்கும் வகையில் தொல்லியல் துறை நிர்வாகம் கம்பிவேலி அமைத்து பாதுகாத்து வருகிறது.
மேலும், அப்படி அமைக்கப்பட்டு இருக்கும் கம்பிவேலியின் உயரம் குறைவாக இருப்பதால், இரவில் மர்ம நபர்கள் எகிரி குதித்து உள்ளே சென்று மது அருந்துவது, பாட்டில்களை உடைத்து சேதப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்வங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், மர்ம நபர்கள் உள்ளே செல்வதை தடுக்கும் வகையில், முதற்கட்டமாக கலங்கரை விளக்க சாலையில் பழைய அர்ஜூனன் தபசு சிற்பத்தை சுற்றி உயரமான கம்பிவேலி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. புராதன சின்னங்கள் வளாக பகுதியில் படிப்படியாக உயரமான கம்பிவேலி அமைக்கப்படும் என தொல்லியல் துறை நிர்வாகத்தினர் கூறினர்.
The post புராதன சின்னங்கள் வளாகத்தில் உயரமான கம்பி வேலி அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.