×

“இது இந்தியாவின் குரல்” பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்கு பின் முடிவு: ராகுல் காந்தி விளக்கம்

புதுடெல்லி: “இந்தியா கூட்டணி சிந்தாந்த ரீதியாக போராடுகிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு பிரதமர் வேட்பாளர் பற்றி முடிவு செய்யப்படும்” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வௌியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புக்கும் தற்போதுள்ளது போன்ற ஆபத்து இதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை. நடைபெற உள்ள மக்களவை தேர்தல் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் அழிக்க நினைப்பவர்களுக்கும், அவற்றை காப்பாற்ற நினைப்பவர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம்.

நாட்டிலுள்ள துறைமுகங்கள், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு துறைகளின் ஏகபோக உரிமையை அதானிக்கு தாரை வார்த்ததை போல, அமலாக்கத்துறை, ஒன்றிய புலனாய்வு அமைப்பு, வருமான வரித்துறையை பயன்படுத்தி நாட்டின் நிதித்துறையிலும் ஏகபோகத்தை மோடி உருவாக்கி உள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜவும், மோடியும் மிரட்டல், அரசியல் அழுத்தங்கள் மூலம் பணம் பறித்தது பற்றி அனைவருக்கும் தெளிவாக தற்போது தெரியும். 2004ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்தியா ஔிர்கிறது என்று பிரசாரம் செய்யப்பட்டது. தற்போது அதேபோன்ற பிம்பத்தை தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் உருவாக்கி வருகின்றன. ஆனால் 2004ல் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும். ஆர்எஸ்எஸ், பாஜவின் வியூகத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஊழல் செய்பவர்கள் அனைவரும் பாஜவுக்கு போகிறார்கள். அதற்கு காரணம் என்னவெனில், அரசியல் நிதி முழுவதும் பாஜவிடம் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார். அனைத்து நிறுவனங்களையும் பாஜ தங்கள் பிடியில் வைத்துள்ளது. காங்கிரசின் தேர்தல் அறிக்கை காங்கிரசால் தயாரிக்கப்படவில்லை. அது நாட்டு மக்களால் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் குரல். அதை நாங்கள் எழுதி வைத்துள்ளோம். சித்தாந்த ரீதியாக நடக்கும் இந்த போராட்ட தேர்தலில் பாஜவை வீழ்த்தி இந்தியா கூட்டணி வெற்றி பெறும். தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி கட்சியினர் இணைந்து பிரதமர் வேட்பாளரை முடிவு செய்வார்கள்” என்று கூறினார்.

The post “இது இந்தியாவின் குரல்” பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்கு பின் முடிவு: ராகுல் காந்தி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,New Delhi ,India Alliance ,Congress ,president ,India ,Dinakaran ,
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பதற்கான...