×

குற்றப்பிரிவு வழக்கு ரத்து அடிப்படையில் அமலாக்கத்துறை தொடரும் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல: கட்டுமான நிறுவன வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குற்றப்பிரிவு வழக்கு ரத்து செய்யப்பட்டால் அதன் அடிப்படையில் தொடரப்பட்ட அமலாக்க துறை வழக்கை விசாரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனமான, ஓஷன் லைப் ஸ்பேசஸ் நிறுவனத்தை எஸ்.கே.பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் ஒன்றாக இணைந்து தொடங்கினர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், நிறுவனத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை எஸ்.கே. பீட்டர் தர மறுத்ததாகக் கூறி, ராம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் எஸ்.கே.பீட்டர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையில், இந்த விவகாரத்தில் சுமார் 50 கோடி ரூபாய் வரை பணப் பரிமாற்றம் நடத்ததாக புகார் எழுந்ததையடுத்து, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதா என அமலாக்கத்துறை அதிகாரிகள் எஸ்.கே.பீட்டர் நிறுவனம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தி, அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து ஆவணங்களுடன் ஆஜராகுமாறு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பீட்டருக்கு சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து பீட்டர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவில், இருவருக்கிடையேயான தொழில் பிரச்னையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பித்தர அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. அப்போது, ஓஷன் லைப் ஸ்பேசஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், நிறுவனத்துக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

எனவே, அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணையை தொடர முடியாது என வாதிட்டார். அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், மத்திய குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி மனுதாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மூல வழக்கான மத்திய குற்றப்பிரிவு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரிக்க முடியாது எனக் கூறி அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

The post குற்றப்பிரிவு வழக்கு ரத்து அடிப்படையில் அமலாக்கத்துறை தொடரும் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல: கட்டுமான நிறுவன வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Madras High Court ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...