×

‘வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன்’ பறக்கும் படையை மிரட்டிய திருப்பூர் பாஜ வேட்பாளர்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கெட்டிச்செவியூர் குறிச்சி பிரிவில் ஈரோடு-திருப்பூர் மாவட்ட எல்லையில், கண்காணிப்பு நிலைக்குழு (பறக்கும் படை) அதிகாரி முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தலைமை காவலர் மகேந்திரன், காவலர் மெய்யானந்தம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து வந்த திருப்பூர் தொகுதி பாஜ வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் வந்த காரை கண்காணிப்பு நிலைக்குழுவினர் வாகன சோதனைக்காக நிறுத்தினர். அப்போது காரை ஓரமாக நிறுத்தாமல் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தியதோடு வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க ஏ.பி.முருகானந்தம் மறுத்தார். காரை நிறுத்தியதும், சப்-இன்ஸ்பெக்டரிடம், ‘‘உங்கள் ெபயர் என்ன?’’ என்று ஏ.பி. முருகானந்தம் கேட்டார். அதற்கு சப்-இன்ஸ்பெக்டர், ‘புகழேந்தி’ என பதில் அளித்தார். ‘‘என்னவாக இருக்கீங்க?’’ என்று ஏ.பி. முருகானந்தம் கேட்டுபோது ‘எஸ்ஐ’ என சப்-இன்ஸ்பெக்டர் பதில் அளித்தார். அந்த நேரத்தில் வேட்பாளரின் காரை மெதுவாக டிரைவர் இயக்கினார். அப்போது, ‘‘என்னை மிரட்டச்சொன்னார்களா?’’ என்று ஏ.பி.முருகானந்தம் கேட்டார். இதற்கு பதில் அளித்த சப்-இன்ஸ்பெக்டர், ‘‘நாங்க ஏன் மிரட்டணும்?. செக் பண்ண சொல்லியிருக்காங்க.

செக் பண்ணிக்கிட்டிருக்கோம்’’ என்று கூறினார். உடனே காரை நிறுத்திய ஏ.பி. முருகானந்தம், கார் கதவை திறந்து இறங்க முயன்றார். பின்னர் சப்-இன்ஸ்பெக்டரை நோக்கி கை நீட்டி, ‘‘மரியாதையா பேசுங்க’’ என்று ஏ.பி. முருகானந்தம் பேசினார். அப்போது கண்காணிப்பு நிலைக்குழுவை சேர்ந்த அலுவலர் முருகேசன், ‘‘நாங்க மரியாதையாகத்தான் பேசுகிறோம்’’ என்றார். அப்போது அவரிடம் பாய்ந்த ஏ.பி. முருகானந்தம், ‘‘நீங்க யாரு?’’ என்று கேட்டார். பின்னர் அவரிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு மிரட்டினார். அதிகாரி முருகேசனும், தனது அடையாள அட்டையை காண்பித்தார். அதை கழுத்தில் போடுங்க என்று ஏ.பி.முருகானந்தம் கூறினார். அப்போது, ‘‘மரியாதையா பேசி பழகனும். புரிஞ்சுதுங்களா. வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன்’’ என ஏ.பி. முருகானந்தம் மிரட்டினார். இதைக்கேட்டதும் அங்கு நின்ற தலைமை காவலர், ‘‘சார் நாங்க அங்கிருந்தே ஸ்லோ பண்ணி லெப்ட்ல ஒதுங்கி வருமாறுதானே கூறினோம்’’ என்றார். உடனே ஏ.பி. முருகானந்தம், ‘‘என்ன என்ன சவுண்டு வுடுறீங்க… மரியாதையா பேசுங்க. நான் இவரிடம்தான் பேசிக்கிட்டிருக்கிறேன். உங்ககிட்ட நா பேசல. மரியாதையா முதல்ல பேசுங்கன்னு சொல்றேன். அதோடு நிறுத்திக்கோங்க’’ என்றார். உடனே அந்த காவலர், ‘‘நான் வாங்க போங்கன்னுதான் பேசுனேன் சார்’’ என்றார். உடனே ஏ.பி. முருகானந்தம், ‘‘உங்க கிட்ட நான் பேசுனேனா? நான் இவருகிட்டதான பேசிக்கிட்டு இருக்கேன்’’ என்றார். ஆனால் அந்த காவலர் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், ‘‘சார் டிராபிக் ஆவுது’’ என்று கூறினார்.

ஆனால் அதை கண்டுகொள்ளாத ஏ.பி. முருகானந்தம், ‘‘நான் இவருகிட்டதான பேசிக்கிட்டிருக்கேன்…நான் இவருகிட்டதான பேசிக்கிட்டிருக்கேன்’’ என்று கூறி அடிக்க பாய்வதுபோல பயங்கர டென்ஷன் ஆனார்.இதைத்தொடர்ந்து ஏ.பி. முருகானந்தத்தின் வாகனத்தை பெயரளவில் சோதனை செய்து அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். பாஜ வேட்பாளர் தேர்தல் கண்காணிப்பு குழுவினரின் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்காததோடு, ‘வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்திற்கு அலைய விடுவேன்’ என்று கூறி காவல்துறை மற்றும் குழுவினரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து திருப்பூர் பாஜ வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் கூறுகையில், “என்னை பிரசாரம் செய்ய விடாமல் தடுக்க சிலர் சதி செய்கிறார்கள். இதை தடுக்க எனது வாகனத்தை அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்கின்றனர். ஒரு கட்டத்தில் அதிகாரிகள் எனது காரை சோதனை செய்ய அரை மணி நேரம் எடுத்துக் கொள்கிறார்கள். இது எனது பிரசாரத்தை பாதிக்கிறது. ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் மரியாதை குறைவாக பேசினார்கள். எனவே மரியாதையுடன் பேசுமாறு அறிவுறுத்தினேன். என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தால் சட்டப்படி சந்திப்பேன்” என்றார்.

The post ‘வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன்’ பறக்கும் படையை மிரட்டிய திருப்பூர் பாஜ வேட்பாளர் appeared first on Dinakaran.

Tags : Tirupur BJP ,Erode-Tirupur district ,Ketcheviyur Kurichi ,Kopi, Erode district ,Vigilance Station ,Flying Force ,Officer ,Murugesan ,Sub-Inspector ,Bhujahendi ,Head Constable ,Mahendran ,Constable ,Meiyanandham ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் இன்று சுனிதா கெஜ்ரிவால் பிரசாரம்