×

கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி கள நிலவரம்

தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளில் 9வது தொகுதியாக கிருஷ்ணகிரி மக்களவை விளங்குகிறது. 2004ல் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழகத்தின் 30வது மாவட்டமாக உதயமானது. 2008ம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு வரை கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் ஓசூர், தளி, காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, பர்கூர், பாலக்கோடு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. இதனையடுத்து, மறுசீரமைப்புக்கு பின் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர் மற்றும் தளி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இணைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மக்களவையை பொறுத்தவரை 8 முறை காங்கிரஸ், 5 முறை திமுக, 4 முறை அதிமுக, ஒரு முறை தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி வாகை சூடியுள்ளது. கருப்பு வைரம் என அழைக்கப்படும் கிரானைட் இங்குதான் அதிகம் வெட்டி எடுக்கப்படுகின்றன. வேளாண்மை, கிரானைட் வெட்டுதல் போன்ற தொழில்கள் வாழ்வாதாரமாக உள்ளது. அதேபோல், கிருஷ்ணகிரி, ஒசூர் தொகுதிகளில் அதிகமான தொழிற்சாலைகள் இருப்பதால் வெளி மாநில தொழிலாளர்களும் கணிசமாக வசிக்கின்றனர். இதுமட்டுமின்றி காய்கறிகள், பூக்கள் என தோட்டப்பயிர்கள் அதிக அளவில் பயிர் செய்யப்படும் பகுதியாகவும் இந்த தொகுதி விளங்கி வருகிறது. ரோஜா பூக்கள் இங்கிருந்து அதிகஅளவில் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகிறது.

கிருஷ்ணகிரி மக்களின் முக்கிய கோரிக்கையாக முன்வைப்பது ஒசூர்- ஜோலார்பேட்டை ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும். அரசு சார்பில் மாங்கூழ் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என்பதாகும். கடந்த முறை நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கையே ஓங்கி இருந்தது. அதன்படி, காங்கிரஸ் வேட்பாளர் செல்வகுமார் 52.60 சதவீதம் வாக்குகள் பெற்று தன்னுடைய வெற்றியை பதிவுசெய்திருந்தார். அதிமுக சார்பில் ஜெயப்பிரகாஷ், பாஜ சார்பில் நரசிம்மன், காங்கிரஸ் கட்சி சார்பில் கோபிநாத் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா ஆகியோர் களம் காண்கின்றனர். பலமுறை காங்கிரஸ் வென்ற தொகுதியான கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியுடன் காங்கிரஸ் போட்டியிடுவதால் வெற்றிக்கான சூழல் தென்பட்டாலும், அதிமுக மற்றும் மற்ற கட்சிகளும் வாக்குகளை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் பெரிய எண்ணிக்கையிலான வாக்குகளை கொண்டு வெற்றியை பெற முடியாத நிலை இந்த தொகுதியில் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துதெரிவிக்கின்றனர்.

பாலினம் வாக்காளர்
எண்ணிக்கை
ஆண்கள் 8,07,389
பெண்கள் 8,02,219
மூன்றாம் பாலினத்தவர் 305
மொத்தம் 16,09,913

சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?
தொகுதிகள் உறுப்பினர்கள்
கிருஷ்ணகிரி அசோக்குமார் (அதிமுக)
ஒசூர் பிரகாஷ் (திமுக)
பர்கூர் மதியழகன் (திமுக)
தளி ராமச்சந்திரன் (சிபிஐ)
ஊத்தங்கரை (தனி) தமிழ்செல்வன் (திமுக)
வேப்பனஹள்ளி கே.பி.முனுசாமி (அதிமுக)

2019ம் ஆண்டு தேர்தல் நிலவரம்:
வேட்பாளர் கட்சி வாக்குகள் சதவீதம்
செல்வகுமார் காங்கிரஸ் 6,11,298 52.64%
கே.பி.முனுசாமி அதிமுக 4,54,533 39.14%
மதுசூதனன் நா.த.க 28,000 2.41%
நோட்டா 19,825 1.71%

கிருஷ்ணகிரி தொகுதியில் வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு வென்றவர்கள் கட்சி
1951 சி.ஆர்.நரசிம்மன் காங்கிரஸ்
1957 சி.ஆர்.நரசிம்மன் காங்கிரஸ்
1962 ராஜாராம் திமுக
1967 கமலநாதன் திமுக
1971 தீர்த்தகிரி கவுண்டர் காங்கிரஸ்
1977 பெரியசாமி அதிமுக
1980 வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸ்
1984 வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸ்
1989 வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸ்
1991 கே.வி.தங்கபாலு காங்கிரஸ்
1996 நரசிம்மன் தமாகா
1998 முனுசாமி அதிமுக
1999 வெற்றிச்செல்வன் திமுக
2004 சுகவனம் திமுக
2009 சுகவனம் திமுக
2014 அசோக்குமார் அதிமுக
2019 செல்வக்குமார் காங்கிரஸ்

The post கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி கள நிலவரம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri Lok Sabha ,Tamil Nadu ,Krishnagiri district ,30th ,Krishnagiri ,Lok Sabha Constituency ,Hosur ,Thali ,Kaveripatnam ,Parkur ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...