×

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!

நன்றி குங்குமம் டாக்டர்

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

கூம்பு வடிவில் கருவிழி!

என்னுடன் நீண்ட நாட்கள் பணிபுரிந்த மருத்துவர் அவர். கனமான கண்ணாடி அணிந்திருப்பார். அவ்வப்போது கண்ணாடியைக் கழற்றி, கண்களை அடிக்கடி கைகளால் தேய்ப்பார். கண் மருத்துவர் என்பதால் இயல்பிலேயே ஒரு பாதுகாப்பு உணர்வு உந்த, “ஐயோ மேடம்! ஏன் கண்ணை இப்படி கசக்குறீங்க?” என்பேன் நான்.

“சின்ன வயசில் இருந்தே பழகிடுச்சு. நிறுத்தணும்னு நினைக்கிறேன். முடியல. நாம பேஷன்ட்ஸுக்கு அட்வைஸ் சொல்றோம். ஆனா பாருங்க நானே இப்படி செய்றேன்” என்பார் சிரித்துக் கொண்டே. கூடவே, “எனக்கு கெரட்டோகோனஸ் பிரச்னை இருக்கு மேடம். ரொம்ப நாளாச்சு செக் அப் பண்ணி. ஒரு நாள் உங்க கிட்ட செக்கப் பண்ணணும்” என்பார். “வாங்களேன், இப்பவே பார்த்துடலாம்” என்று நான் கூற, “இல்ல இன்னைக்கு வேண்டாம். ரவுண்ட்ஸ் போகணும். இன்னொரு நாள் பார்ப்போம்” என்பார். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பணி வந்து சேர்ந்தது.

கெரட்டோகோனஸ் என்ற பிரச்னை இருக்கக்கூடியது பரம்பரையாக சிலருக்கு ஏற்படக்கூடும். கெரட்டோகோனஸால் பாதிக்கப்பட்ட பத்துப் பேரை எடுத்துக் கொண்டால் அதில் ஒரு நபருக்காவது பெற்றோர்களில் ஒருவருக்கு அந்தப் பிரச்னை இருந்திருக்கக்கூடும். நமக்கெல்லாம் கருவிழி ஒரு சிறிய பந்தின் கால்வாசிப் பகுதியை வெட்டி எடுத்தாற்போல் கோள (sphere) வடிவில் இருக்கும். Keratoconusல்‌ கருவிழி அரைக்கோள வடிவமாக இல்லாமல், கூம்பு வடிவில் இருக்கும் (conical cornea). நோயாளியை கீழே பார்க்கச் சொல்லி பரிசோதித்தால், கூம்பு வடிவக் கருவிழி கண் இமையின் கீழ்ப் பகுதியில் ஒரு வளைவை ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்க முடியும் (Munson’s sign).

சில குழந்தைகளுக்கு சிறு வயது முதலே தூசி, மகரந்தத் தூள் உட்பட்ட காரணங்களால் கண்ணில் ஒவ்வாமை (allergic conjunctivitis) இருந்து கொண்டே இருக்கும். அத்தகைய குழந்தைகள் அரிப்பு மற்றும் கண் கூச்சத்தால் கண்களை அடிக்கடித் தேய்ப்பதால் கருவிழியின் அமைப்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டு அது கூம்பு வடிவில் மாறிவிடக்கூடும். கூம்பு வடிவக் கருவிழி இருப்பவர்கள் பலருக்கு சிறுவயதிலேயே பார்வைக் குறைபாடும் இருக்கும். சில குழந்தைகளுக்கே தலைவலி அல்லது வகுப்பில் கரும்பலகையில் எழுத்துக்கள் தெரியவில்லை என்ற அறிகுறிகள் தோன்றி ஏற்கனவே பரிசோதனை செய்து சிலிண்டர் பவர்களை (astigmatism) உடைய கண்ணாடியை அணிந்திருப்பார்கள். பொதுவாக பதின்வயதில் கெரட்டோகோனஸ் பிரச்னையைக் கண்டறிய முடியும்.

நம் மருத்துவத் தோழிக்கும் அதே பிரச்னைதான். சிறுவயதில் “போர்டு தெரியவில்லை” என்று அவர் கூறியதால் அவரது பெற்றோர் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி கண்ணாடி அணிவித்திருந்தனர். ஆண்டுதோறும் மிகச் சரியாகப் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். மருத்துவக் கல்லூரியில் அவர் படிக்கும் பொழுது ஒருமுறை கண்களில் கூச்சமும் நீர் வடிதலும் ஏற்பட்டிருக்கிறது. ‘உங்கள் கருவிழி மிக மெலிதாக, கூம்பு வடிவில் இருக்கிறது. இதனால் இதே போன்ற பிரச்சனைகள் மீண்டும் ஏற்படலாம். அதனால் ஒரு சிறிய லேசர் போன்ற சிகிச்சையை செய்து கொள்ளுங்கள்.

இதற்கு மேல் கருவிழியின் கூம்பு வடிவம் அதிகரிக்காமல் இருக்கும்’ என்று மருத்துவமனையில் ஆலோசனை சொல்லி இருக்கின்றனர். அது தோழிக்குத் தேர்வு நெருங்கும் நேரமாய் இருக்கவே, தேர்வை முடித்து விட்டுப் பார்க்கலாம் என்று எண்ணியிருக்க அடுத்தடுத்து அவருக்கு வேலைகள் தொடர்ந்து வந்தன. படிப்பை முடித்தவுடன் வேலை, உடனடியாக திருமணம் குழந்தை பிறப்பு என்று இருந்தவரால் அதன் பின் பரிசோதனைக்கும் முறையாகச் செல்ல முடியவில்லை. பொதுவாகவே பணிச்சுமை காரணமாக மருத்துவர்கள் தங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்வதில்லை என்பது பல மருத்துவர்களே ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம். பல மருத்துவர்கள் குறித்த நேரத்தில் சிகிச்சை பெற மாட்டார்கள், அதுவே தோழியின் விஷயத்திலும் உண்மையானது.

பணிக்கு வந்திருந்த ஒரு நாளில் அதிகக் கூச்சம், கண்களில் நீர் வடிதல், சிவப்பு என்ற அறிகுறியுடன், “மேடம்! ரொம்ப வெளிச்சமே பார்க்க முடியல.. செக் பண்ணுங்களேன்” என்றார். ஸ்லிட் லாம்ப்பில் அமர வைத்துப் பரிசோதித்ததில், அவரது கருவிழியின் மேற்புறத்தில் சில வெடிப்புகள் காணப்பட்டன. அதன் காரணமாக நீர் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. பழைய தழும்பு ஒன்றும் தெரிந்தது. அவர் ஏற்கனவே சொல்லியிருந்த படி அவரது கருவிழி கூம்பு வடிவில் இருந்தது.

வெடிப்பை ஆற்றுவதற்கான சிகிச்சைகளை அளித்து சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி கூறினேன். ஓரிரு வாரங்களில் அவரது கருவிழிப் புண் ஆறி‌ விட்டது. ஆனால் கருவிழியின் மேற்புறத்தில் தழும்பு ஒன்று தெரிந்தது. பின் வேறு சில பரிசோதனைகளுக்கு உட்படுத்திப் பார்க்க, அந்தத் தழும்பு நிரந்தரமானது என்பதால் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருக்கலாம் என்று கூறினேன். கருவிழி சிறப்பு நிபுணர் ஒருவரை கலந்தாலோசித்த போது அவரும் அதையே உறுதிப்படுத்தினார்.பின் சில நாட்கள் காத்திருந்து உயிரிழந்தவர் ஒருவரின் கருவிழி தானமாகக் கிடைத்த மறுநாளில் அவருக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம். பார்வை ஓரளவுக்கு மீண்டு தற்சமயம் நலமாக இருக்கிறார்.

கருவிழியின் அடுக்குகள் மெலிதாக இருப்பதால் அவற்றிக்கு இடையில் நீர் கோர்த்துக்கொள்வதும் (stage of hydrops), பின் அதில் வெடிப்பு ஏற்படுவதும் (striae) கெரட்டோகோனஸ் பிரச்சனையின் அடுத்தடுத்த கட்டங்கள். தோழிக்கு ஏற்பட்டது போல் தழும்பு ஏற்படுவது நான்காவது நிலை (scarring). தன் வேலையின் நடுவில் கொஞ்ச நேரம் ஒதுக்கி சிகிச்சை மேற்கொண்டிருந்தால் அவசர சிகிச்சைக்கு கஷ்டப்பட்டிருக்க மாட்டேன் என்று தோழி அடிக்கடி வருந்துவார்.

இப்போதெல்லாம் அதிக சிலிண்டர் பவர் உடன் இருக்கும் குழந்தைகளுக்கு corneal topography என்ற பரிசோதனையைச் செய்யுமாறு வலியுறுத்துகிறோம். ஒரு சில நிமிடங்களில் செய்து முடித்து விடக்கூடிய எளிமையான சிகிச்சையில் பரிசோதனை இது. இதன் முடிவில் கிடைக்கும் அறிக்கையில் கருவிழியை பல வண்ணக் குறியீடுகளால் குறிக்கப் பட்டிருக்கும். பச்சை மற்றும் நீலப்பகுதிகள் கருவிழியின் கனமான பகுதிகள் என்று பொருள்.

மஞ்சள் மற்றும் சிவப்புப் பகுதிகள் அதிகமாகத் தெரிந்தால் அந்த இடங்களில் கருவிழி மெலிதாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். கூடவே, கருவிழியின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே என்ன அளவிற்கு கனம் இருக்கிறது என்பதையும் அறிக்கையே குறிப்பிட்டுக் காட்டிவிடும். அதன் அடிப்படையில் தேவைப்பட்டால் கருவிழி சிறப்பு நிபுணர் உங்களுக்கு Collagen cross linkage (C3R) என்று அழைக்கப்படும் சிகிச்சையைச் செய்யச் சொல்வார்.

பரம்பரைக் காரணங்களால் ஏற்படும் கெரட்டோகோனஸ் பிரச்சனையில் கருவிழியின் stroma பகுதியிலுள்ள தசை நார்கள் வழக்கத்தைவிட மெலிதாக இருப்பது இந்த நோய்க்கு ஒரு காரணம் என்று யூகிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் உருவானதே இந்த C3R சிகிச்சை. இந்த சிகிச்சைக்குப் பின் குழந்தைகளுக்கு கண்ணாடியின் பவரில் முன்பைப் போல் பெருமளவு மாற்றம் ஏற்படுவதில்லை. பதின் வயதிலேயே இந்த சிகிச்சையை மேற்கொண்டு விட்டால் பின்னாளில் கெரட்டோகோனஸால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.

இன்னொரு கல்லூரி மாணவி. இவருக்கும் Keratoconus பிரச்சனைதான். இவருக்கு கண்ணாடிக்குப் பதிலாக hard contact lens பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. “என் தோழிகள் சிலர் கண் குறைபாட்டிற்காக soft contact lens பயன்படுத்துகின்றனர். அதுதான் புதிய கண்டுபிடிப்பு என்றும், வசதியாக இருக்கிறது என்றும் சொல்கின்றனர். எனக்கு மட்டும் ஏன் hard lens?” என்று கேள்வி எழுப்பினார் அந்த மாணவி. கெரட்டோகோனஸ் சிகிச்சையில் ஹார்ட் காண்டாக்ட் லென்ஸ் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒன்று.

சற்று கனமான மேற்பரப்புடன் கூடிய லென்சை கருவிழிக்கும் மேலே பொருத்துகையில், கெரட்டோகோனஸ் ஏற்கனவே ஏற்பட்ட கருவிழி மேற்பரப்பில் ஏற்பட்ட மேடு பள்ளங்களை சீர் செய்து ஒரு புதிய வெளிச்சம் ஊடுருவும் பாதையை இவை கட்டமைக்கின்றன. அது கருவிழியில் வெடிப்பு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படாமல் வைக்கும். அதனால்தான் இவர்களுக்கு கனமான லென்ஸ்களை பயன்படுத்துகிறோம். பிறரைப் போல soft lens பயன்படுத்தினால் ஏற்கனவே இருக்கும் குறைபாடுகளை சீர் செய்வது கடினம். ஒவ்வொரு நபரின் கருவிழியும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமாக இருக்கும். எனவே நோயாளிக்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுத்து அணிவது மிக அவசியம். தற்போது வந்திருக்கும் புதிய அறுவை சிகிச்சை மற்றும் லேசர் முறைகளால் பலருக்கு hard lenses தேவைப்படுவதில்லை.

தொடர் சிகிச்சை மற்றும் பரிசோதனையின் போது கெரட்டோகோனஸ் பிரச்சனையை ஆரம்ப நிலையில் கண்டறிய முடியும்.‌என்னிடம் வரும் சிறுவர்களில் -4.00Cyl மேல் சென்றால் Corneal topography பரிசோதனை செய்து கருவிழி மருத்துவர் ஒருவரிடம் கருத்துரு வாங்கிக் கொள்ளுமாறு பெற்றோர்களை அறிவுறுத்துகிறேன். C3R சிகிச்சை தேவை என்று அறிவுறுத்தப்படும் குழந்தைகளின் பெற்றோர், “சின்ன பிள்ளையா இருக்கானே..

இப்பவே செய்யணுமா?” என்ற கேள்வியுடன் வருகின்றனர். அவர்களிடம் நான், “கோன் வடிவம் ஐஸ்கிரீமில் இருந்தால் அதை ரசிக்கலாம். கருவிழியில் இருந்தால் அதை கவனத்துடன் அணுக வேண்டும். அதனால் சீக்கிரமே தசைநார்களை வலுவாக்கும் சிகிச்சையைச் செய்யுங்கள். அதன் பலன்கள் மிக அதிகம். மிக எளிதானது” என்று கூறியே அனுப்புகிறேன்!

The post கண்ணைக் கட்டிக் கொள்ளாதே! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Akilanda Bharti Cone ,
× RELATED குதிகால் வலி