×

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களுக்கு கம்பிவேலி பாதுகாப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் அமைந்துள்ள வளாகப் பகுதிகளில் மர்ம நபர்களின் ஊடுருவலை தடுக்க, வளாகப் பகுதியை சுற்றிலும் உள்ள கம்பிவேலிகளின் உயரத்தை அதிகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பல்லவ மன்னர்கள் செதுக்கிய கடற்கரை கோயில் உள்பட பல்வேறு புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்நாட்டு பயணிகளுக்கு ரூ.40, வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600 என தொல்லியல் துறை நிர்வாகம் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், இங்குள்ள புராதன சின்னப் பகுதிகளைப் பாதுகாக்கும் வகையில், அப்பகுதியை சுற்றிலும் குறைவான உயரத்தில் கம்பி வேலி அமைத்து தொல்லியல் துறை நிர்வாகம் பாதுகாத்து வருகிறது. எனினும், உயரம் குறைவான கம்பிவேலிகளை கொண்ட புராதன சின்னப் பகுதிகளில் எந்நேரமும் மர்ம நபர்கள் சிலர் ஊடுருவி, அங்கு மது அருந்துதல், காலி பாட்டில்களை உடைத்து சேதப்படுத்துவது உள்பட பல்வேறு சமூகவிரோத, குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்புகார்களின்பேரில், நேற்று முதல்கட்டமாக கலங்கரை விளக்க சாலையில் உள்ள பழைய அர்ஜூனன் தபசு சிற்பத்தை சுற்றிலும் குறிப்பிட்ட உயரத்துக்கு கம்பி வேலிகளை மாற்றியமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பின்னர், படிப்படியாக அனைத்து புராதன சின்னப் பகுதிகளை சுற்றிலும் கம்பி வேலிகளை உயர்த்திக் கட்டும் பணி துரிதகதியில் நடைபெறும் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

 

The post மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களுக்கு கம்பிவேலி பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Tamil Nadu ,
× RELATED மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்; 7 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்