×

அமணம்பாக்கம் ஊராட்சியில் கிடப்பில் பேருந்து நிலைய பணிமனை கட்டுமானப் பணிகள்: தொடர்ச்சியாக போராட முடிவு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே அமணம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமரைப்பாக்கம் கிராமப் பகுதியில் விவசாயிகள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியை சுற்றிலும் அமணம்பாக்கம், வெங்கல், மாகரல், புன்னம்பாக்கம், பாகல்மேடு, செம்பேடு, கொமக்கன்பேடு, சேத்துப்பாக்கம் உள்பட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த அனைத்து மக்களும் தாமரைப்பாக்கம் கூட்டுசாலைக்கு வந்து, அங்கிருந்து சென்னை, திருவள்ளூர், செங்குன்றம், ஆவடி, அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி போன்ற பகுதிகளுக்கு விழுப்புரம் கோட்ட அரசு மற்றும் மாநகர பேருந்துகளில் சென்று வருகின்றனர்.

எனினும் தாமரைப்பாக்கம் பகுதிகளில் அரசு மற்றும் மாநகர பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படுவதில்லை. தாமரைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் அரசு மற்றும் மாநகர பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, அப்பகுதியில் மாநகர போக்குவரத்து பணிமனை மற்றும் பேருந்து நிலையம் அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இக்கோரிக்கையை ஏற்று, கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், தாமரைப்பாக்கம் அருகே அமணம்பாக்கம் கிராமத்தில் ஐந்தரை ஏக்கரில் அரசு நிலம் ஒதுக்கி, அங்கு மாநகர போக்குவரத்து பணிமனை மற்றும் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அந்த இடத்தை போக்குவரத்து அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தி, அங்கு மாநகர போக்குவரத்து பணிமனை மற்றும் பேருந்து நிலையம் என்று பெயர் பலகை வைத்ததோடு சரி. இங்கு பேருந்து பணிமனை மற்றும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அங்கு பேருந்து பணிமனை மற்றும் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் கிடப்பிலேயே இருக்கின்றன. தற்போது அந்த பெயர் பலகையும் துருப்பிடித்து சேதமாகி கீழே விழுந்துவிடும் அவலநிலையில் உள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், அங்கு போக்குவரத்து பணிமனை மற்றும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால், அமணம்பாக்கத்தில் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி, அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக பலகட்ட போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். எனவே, அங்கு மாநகர பேருந்து பணிமனை மற்றும் பேருந்து நிலையப் பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

The post அமணம்பாக்கம் ஊராட்சியில் கிடப்பில் பேருந்து நிலைய பணிமனை கட்டுமானப் பணிகள்: தொடர்ச்சியாக போராட முடிவு appeared first on Dinakaran.

Tags : Amanambakkam ,Panchayat ,Oothukottai ,Thamaraipakkam ,Amanampakkam Panchayat ,Periyapalayam ,Vengal ,Magaral ,Punnambakkam ,Bagalmedu ,Sempedu ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...