×

காஞ்சிபுரம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 8 மாணவ, மாணவிகள் காயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 8 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் பெற்றோர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மற்ற வகுப்புகள் பிற்பகல் வேளையில் நடைபெற்று வருகிறது‌.

மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக பேருந்து, வேன்கள் இயக்கப் படுகின்றன. இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த வேடல், இலுப்பப்பட்டு போன்ற இடங்களில் மாணவ, மாணவிகள் 12 பேரை ஏற்றிக்கொண்டு வேன் பள்ளிக்கு புறப்பட்டது. ராஜகுளம் பகுதியில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 மாணவிகள், 4 மாணவர்கள் காயமடைந்தனர். இதில் 8ம் வகுப்பு படிக்கும் தருண்குமார் என்ற மாணவன் படுகாயமடைந்தான். மீதமுள்ள மாணவர்கள் காயமின்றி தப்பினர்.

விபத்து குறித்து தகவலறிந்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அறிந்து மாணவர்களின் பெற்றோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

The post காஞ்சிபுரம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 8 மாணவ, மாணவிகள் காயம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Ekambaranatha Temple Sannathy Street ,Kanchipuram Corporation ,Dinakaran ,
× RELATED அண்ணா நினைவு பூங்காவில் பாம்புகள் தொல்லை: பொதுமக்கள் அச்சம்