×

17 லட்சம் மாணவர்களின் கல்வி பாதிப்பு… உத்தரப்பிரதேச அரசின் மதரஸா கல்வி சட்டம் செல்லாது என்ற ஐகோர்ட் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை!!

டெல்லி : உத்தரப்பிரதேச அரசின் மதரஸா கல்வி சட்டம் செல்லாது என்ற ஐகோர்ட் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உத்தரப்பிரதேச அரசின் மதரஸா கல்வி சட்டம் சட்டவிரோதம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மதரஸா கல்வி சட்டம் நாட்டின் அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இதையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 5 பேர் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.யந்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு விசாரித்தது.

அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “2004-ம் ஆண்டைய மதரஸா சட்டத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் தவறாக புரிந்துகொண்டுள்ளது. மதரஸா கல்வி வாரியச் சட்டம் மதக்கல்வி கற்பிப்பது தொடர்பான எந்த விதிமுறைகளையும் வகுக்கவில்லை. மதரஸாக்களை ஒழுங்குப்படுத்துவதே மதரஸா கல்வி வாரியச் சட்டத்தின் நோக்கமாகும். மதரஸாவில் மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்கவேண்டும் என்றால் மதரஸா சட்டத்தை ரத்து செய்வது தீர்வாகாது.

மதரஸா மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டும் எனில் அதற்குரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பால் மதரஸாவில் படிக்கும் 17 லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடைவிதித்து பின் உ.பி. மாநில மற்றும் ஒன்றிய அரசு பதில் தரவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post 17 லட்சம் மாணவர்களின் கல்வி பாதிப்பு… உத்தரப்பிரதேச அரசின் மதரஸா கல்வி சட்டம் செல்லாது என்ற ஐகோர்ட் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,iCourt ,Uttar Pradesh Government ,Delhi ,Uttar Pradesh ,Allahabad High Court ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...