×

10 ஆண்டுகால மக்களின் மனக்குமுறல்களை தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்ட காங்கிரஸ்… முக்கிய அம்சங்கள் என்னென்ன ?

டெல்லி : மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். மக்களவை தேர்தலுக்காக 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகள் அளித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், சமூக நீதியை அடிப்படையாக கொண்டு காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

அவை பின்வருமாறு..

*ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும்.இந்த தொகை குடும்பத்தில் உள்ள மூத்த பெண்மணியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

*அனைத்து நிறுவனங்களும் மகளிருக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பை கட்டாயம் வழங்க வேண்டும்

*நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை. மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர் சேர்க்கையை கடைபிடிக்கலாம்.

*2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*மனித கழிவுகளை மனிதரே அள்ளும் நடைமுறை ஒழிக்கப்படும். அத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு வேறு துறைகளில் திறன் மேம்பாடு அளிக்கப்பட்டு, கண்ணியமான மற்றும் பாதுகாப்பான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

*பட்டியலின மாணவர்கள் மீதான துன்புறுத்தல்களைத் தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்படும்!.

*அரசு தேர்வுகள் விண்ணப்பக் கட்டணத்தை காங்கிரஸ் ரத்து செய்யும்.

*முதியவர்கள், விதவைப் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் பென்ஷன் ரூ.1000 உயர்த்தப்படும்.

*21 வயதுக்கு கீழே உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

*ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படும். உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.7.5 லட்சம் வரை வழங்கப்படும்.

*முப்படை வீரர்களை தேர்வு செய்யும் அக்னி பாத் திட்டம் ரத்து செய்யப்படும். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவினால் தானே பதவி இழக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.

*வாக்களிக்கும்போது வாக்காளர் ஒப்புகைச் சீட்டை பார்த்த பிறகு பெட்டியில் போடும் நடைமுறை அமல்படுத்தப்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படாது .

*அனைத்து விசாரணை அமைப்புகளும் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து மக்கள் விரோத சட்டங்களிலும் திருத்தம் செய்யப்படும்.

*பா.ஜ.க.வுக்கு மாறியதால் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மீதான வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்.

*பால்புதுமையினர் (LGBTQIA+) நல சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்படுவதற்கான சட்டம் இயற்றப்படும். LGBT சமூகத்தினரின் திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும்.

*10 ஆண்டுகளில் எவ்வித விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய சட்டங்களை ஆய்வு செய்து மாற்றங்கள் செய்யப்படும்.

*பெண்களுக்கான ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதை தவிர்க்க ஒரே வேலை, ஒரே ஊதியம் திட்டம் அமல்படுத்தப்படும்.

*திருமணம், வாரிசுரிமை, தத்தெடுத்தலில் ஆண்கள், பெண்களுக்கு இடையேயான பாகுபாடுகள் களையப்படும்.ஊடக சுதந்திரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*மக்களின் உணவு, உடை, காதல் திருமணம் மற்றும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயணம் செய்து வசிப்பது போன்ற தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடமாட்டோம்.

*சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டு, சராசரி கல்வித் தகுதி/திறன் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வழிவகை செய்யப்படும்

The post 10 ஆண்டுகால மக்களின் மனக்குமுறல்களை தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்ட காங்கிரஸ்… முக்கிய அம்சங்கள் என்னென்ன ? appeared first on Dinakaran.

Tags : Congress ,Delhi ,Congress Party ,President ,Karke ,Rahul Gandhi ,Lok Sabha ,
× RELATED உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி...