×

தொழிலாளர் குடியிருப்புகளை சீரமைக்க கோரிக்கை -மின் இணைப்புகளை மேம்படுத்த வேண்டும்

மூணாறு : மூணாறில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளை முழுமையாக சீரமைத்து தர வேண்டும் எனவும், மின் இணைப்புகளை நவீன முறையில் மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.கேரள மாநிலம், மூணாறில் தனியார் தேயிலை நிறுவனங்களுக்கு சொந்தமான ஏராளமான எஸ்டேட்கள் உள்ளன. இங்கு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பல தலைமுறைகளாக தேயிலை தோட்டங்களில் வேலை செய்து வரும் இவர்கள், தேயிலை நிறுவனங்கள் சார்பில் கொடுக்கபட்டுள்ள 2 அறைகளை கொண்ட லயன்ஸ் வீடுகளில் வசித்து வருகின்றனர்.

நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட லயன்ஸ் வீடுகள் சுமார் 100 ஆண்டுகள் பழமையானவை. இந்த வீடுகளின் மேற்கூரைகள் சற்று பலத்த காற்றடித்தால் பறந்து போகும் நிலையில் உள்ளன. சுவர்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. வீடுகளில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் முழுவதும் தீப்பிடித்து சேதமடைந்தன. இதில் தொழிலாளர்கள் வைத்திருந்த பணம், பொருட்கள், ஆவணங்கள், சான்றிதழ்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. இதனால் தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு மின் இணைப்பு வழங்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள வீடுகள் இரு அறைகளை கொண்டது என்பதால் 2 பல்புகள் மட்டும் உபயோகிக்கும் வகையில் அப்போது வயரிங் செய்யப்பட்டது. தற்போது மாறிவரும் கால சூழலில் வீடுகளில் டி.வி., மிக்ஸி உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதற்கேற்ப வயரிங் இணைப்புகள் மேம்படுத்தப்படாமலும், பராமரிப்புப் பணிகளும் நடைபெறாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

அதனால் குடியிருப்புகளை முழுமையாக சீரமைத்து, வயரிங் இணைப்புகளை மேம்படுத்தித் தரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மூணாறு பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளில் தீ விபத்து தொடர்கதையாகி வருகிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் தொழிலாளர்களின் 25 குடியிருப்புகள் தீ விபத்தில் சேதமடைந்துள்ளன. இதில் பெரும்பாலான தீ விபத்துகளுக்கு மின்கசிவே காரணம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் மின் வயர்களை மாற்றித்தர நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தீ விபத்துகள் தொடர்கின்றன.

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சிறுக சிறுக சேர்த்த தங்க ஆபரணங்கள் தீ விபத்துகளில் சேதமடைகின்றன. கல்வி சான்றிதழ்கள், பணமும் எரிந்துவிடுகின்றன. இதனால் தொழிலாளர்கள் பரிதவித்து வருகின்றனர். எனவே, தொழிலாளர்களின் குடியிருப்புகளை சீரமைத்து, தற்போதைய மின்சார பயன்பாட்டுக்கு ஏற்ப மின்வயர்களை மாற்றித்தர நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உயிர்ப்பலி போன்ற அசம்பாவிதம் ஏற்படும் முன் விரைந்து நடவடிக்கை எடுப்பது அவசியம். அப்படி செய்தால் தொழிலாளர்கள் நிம்மதியாக வாழ முடியும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post தொழிலாளர் குடியிருப்புகளை சீரமைக்க கோரிக்கை -மின் இணைப்புகளை மேம்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Munnar ,Munnar, Kerala ,
× RELATED மூணாறில் காரை அடித்து உடைத்த காட்டு யானை கூட்டம்