×

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 174 பதற்றமான வாக்குசாவடிகள்

*கண்காணிக்க 222 நுண்பார்வையாளர்கள் நியமனம்

நாமக்கல் : நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ள 174 வாக்குசாவடிகளை கண்காணிக்க, 22 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி வகுப்பு, கலெக்டர் தலைமையில் நடந்தது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், நாடாளுமன்ற பொது தேர்தல் வரும் 19ம்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மும்முரமாக செய்து வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 1628 வாக்குசாவடிகள் உள்ளன. இதில் 174 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குசாவடிகளாக கண்டறியப்பட்டது. கடந்த காலங்களில் இந்த பகுதியில் நடந்த தேர்தலின் போது, ஏற்பட்ட பிரச்னையின் அடிப்படையில் பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் வாக்குபதிவு முழுவதும், ஆன்லைன் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 174 வாக்குசாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்படுகிறது.

பதற்றமான வாக்குசாவடிகளில் தேர்தல் நாளன்று பணியாற்ற 222 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம், நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான உமா கூறியதாவது:நாமக்கல் மாவட்டத்தில் 53 வாக்குப்பதிவு மையங்களில், 174 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க வங்கி மற்றும் ஒன்றிய அரசு பணியாளர்களை, நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளவர்கள், அந்த வாக்குச்சாவடிகளுக்கான அனைத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். நுண்பார்வையாளர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணித்து, நேரடியாக பொது பார்வையாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

நுண்பார்வையாளர்கள் ஒவ்வொருவரும், தங்களது வாக்குச் சாவடிகள் தொடர்பான அனைத்து விபரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தேர்தல் தொடர்பான அனைத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், முறையான பதிவேடுகளை பராமரித்து அவற்றை வாக்குப்பதிவு நாளன்று, வாக்குப்பதிவு முடிந்தவுடன் பொதுப்பார்வையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

நுண்பார்வையாளர்கள் வாக்குப்பதிவு நாளன்று, மாதிரி வாக்குப்பதிவு நடத்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீர்நிலையில் உள்ளது என்பதை உறுதி செய்து தெரிவிக்க வேண்டும். வாக்குச்சாவடி முகவர்களுக்கு, சரியான அடையாள அட்டை உள்ளதா என்பதையும், வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்ட 12 அடையாள அட்டைகள் மூலம் வாக்களிக்கிறார்களா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

நியமிக்கப்பட்டுள்ள நுண்பார்வையாளர்கள் அனைவரும், நாடாளுமன்ற தேர்தல் நேர்மையாக நடத்த உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், இணை பதிவாளர் அருளரசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ராஜேஷ், மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 174 பதற்றமான வாக்குசாவடிகள் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Tamil Nadu ,Puducherry ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...