×

பேட்டை எம்ஜிஆர் நகரில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் மீண்டும் தர்ணா போராட்டம்

*அதிகாரிகள் சமரசம்

பேட்டை : பேட்டை எம்ஜிஆர் நகர் வெங்கப்பன்குளம் நீர்நிலைப் பகுதியில் சுமார் 56 ஆண்டுகளாக குடியிருந்துவரும் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மின் கட்டணம், மாநகராட்சி தீர்வை ஆகியவற்றை முறையாக செலுத்தி வருகின்றனர். இவர்கள் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு பட்டா வழங்குவதோடு அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர்.

அத்துடன் இதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் மேற்கொண்டுள்ளனர். ஆனால், இப்பகுதியானது புனை வெங்கப்பன் குளத்தின் நீர் புறம்போக்கு பகுதி என்றும், நீதிமன்ற உத்தரவின்பேரில் நீர்நிலை பகுதிகளின் பாதுகாப்பு கருதி ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் அவற்றை அகற்றிட வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும் என அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். அத்துடன் இதற்கு மாற்றாக அப்பகுதி மக்களை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் நெல்லை அருகே ரெட்டியார்பட்டியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் புலம்பெயர செய்து குடியில் அமர்த்துவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.

ஆனால், இதை ஏற்க மறுத்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எம்ஜிஆர் நகர் வெங்கப்பன்குளம் நீர்நிலைப்பகுதிகளில் வசித்துவரும் குடியிருப்பு வாசிகள் கடந்த மாதம் 14ம் தேதி குடும்பத்துடன் சமைத்து இரு நாட்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விரைந்துவந்த நெல்லை தாசில்தார் ஜெயலட்சுமி, பேட்டை இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற குடியிருப்புவாசிகள், வெங்கப்பன் குளத்தின் நீர்ப்பகுதியில் உள்ள நிலங்களை முற்றிலும் அளவீடு செய்து தங்களுக்கு பட்டா வழங்குவதோடு சாலை, குடிநீர், பாதாள சாக்கடை திட்ட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதருமாறு வலியுறுத்தினர். இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், இக்கோரிக்கைகளை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்வதோடு நில அளவீடு துறை மூலம் முறையாக அளவீடு செய்யப்படும் என்றனர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

ஆனால், அடுத்த இருதினங்களிலும் மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 16ம் தேதி தேர்தல் ஆணையத்தால் வெளியானது. அத்துடன் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் தேர்தல் பணிகளில் அதிகாரிகள் முழுமையாக ஈடுபட்டதால் நிலங்களை அளவீடு செய்வதில் காலதாமதமானது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் கடந்த மார்ச் 31ம் தேதி தொடர் போராட்டம் மேற்கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டதோடு தங்களது வீடு மற்றும் வீதிகளில் கருப்பு கொடிகள் கட்டினர். மேலும் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக பேட்டை சேரன்மாதவி சாலையில் எம்ஜிஆர் நகருக்கு செல்லும் வழியில் பேனரும் வைத்தனர்.

இதையடுத்து மீண்டும் சமரச முயற்சியில் ஈடுபட்ட காவல், வருவாய் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், நில அளவீடு செய்வதற்கான வரைப்படத்தின் நகல் சென்னையில் உள்ளதால், அதை விரைவில் நெல்லைக்கு கொண்டுவரச்செய்து நில அளவீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட குடியிருப்புவாசிகள், ஏப். 4ம் தேதிக்குள் காலம் தாமதம் ஏற்பட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என புதிய பேனர் வைத்திருந்தனர்.

ஆனால், அதிகாரிகள் உறுதியளித்த படி நில அளவீடு பணி நேற்று காலை வரை மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து தெரியவந்ததும் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் பேட்டை எம்ஜிஆர் நகர் தங்கம்மன் கோயில் அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் மீண்டும் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த நெல்லை மண்டல துணை தாசில்தார் சேதுராம்ஜி, ஆர்ஐ லட்சுமணப்பாண்டியன், விஏஓ தாளமுத்து, பேட்டை இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். எம்ஜிஆர் நகருக்கான வரைப்படம் சென்னையில் இருந்து இன்னும் வரவில்லை என்றும், தற்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் அனுமதி இன்றி கூட்டம் போடுவதற்கும், போராட்டம் செய்வதற்கும் அனுமதி கிடையாது என்றனர்.

மேலும் வரைப்படம் கிடைக்கப்பெற்றதும் தேர்தல் முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட நிலங்களை முறையாக அளவீடு செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாகக் கூறினர். இதை ஏற்றுக்கொண்ட மக்கள் போராட்டம் மற்றும் தேர்தல் புறக்கணிப்பை வாபஸ் பெற்றதோடு அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இருப்பினும் அடுத்தடுத்து நடந்துவரும் தொடர் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

The post பேட்டை எம்ஜிஆர் நகரில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் மீண்டும் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Public dharna ,Pettai MGR Nagar ,Pettah ,Pettah MGR Nagar ,Venkappankulam ,Pettai MGR ,Dinakaran ,
× RELATED தா.பேட்டை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை