×

14 நாட்களில் மக்களவை தேர்தல் பறக்கும்படை தொய்வின்றி பணியாற்ற வேண்டும்

*ஆட்சியர் பழனி உத்தரவு

விழுப்புரம் : மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பறக்கும்படை மற்றும் நிலைகண்காணிப்பு குழுவினர் தொய்வின்றி சோதனை பணிகளில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.விழுப்புரம் மாவட்டத்தில் மக்களவை தேர்தலையொட்டி பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகள் குறித்து நியமன அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனைகூட்டம் தேர்தல்நடத்தும் அலுவலரான, ஆட்சியர் பழனி தலைமையில் நடந்தது. காவல்துறை தேர்தல்பார்வையாளர் திரேந்திரசிங்குஞ்சியால், தேர்தல்செலவின பார்வையாளர் ராகுல்சிங்கானியா முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து ஆட்சியர் பழனி கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமீறல்களை கண்டறிவதற்காக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 7 சட்டமன்ற ெதாகுதிகளுக்கும் 21 பறக்கும்படை மற்றும் 21 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும்படை மற்றும் நிலைகண்காணிப்பு குழு தங்களுக்கு தினசரி ஒதுக்கப்படும் இடங்களில் முழுமையாகவும், துரிதமாகவும் அனைத்து பகுதிகளில் வரும் வாகனங்களை கண்டிப்பாக சோதனை செய்ய வேண்டும். அதிக வாகன போக்குவரத்து பகுதிகளை கண்டறிந்து சோதனை பணிகளை தீவிரப்படுத்தவேண்டும்.

விழுப்புரம் முதல் புதுச்சேரி சாலை பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகள் மற்றும் மாற்றுவழிகளில் செல்லும் பகுதிகளிலும் சோதனைச்சாவடிகளில் உள்ள காவலர்களையும் தொடர்பில் இருந்துகொண்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவேண்டும். சோதனையின்போது வாகனங்கள் ஏதேனும் நிறுத்தாமல் செல்லும் பட்சத்தில் வீடியோ கிராபர் மூலமாக வாகனத்தின் எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்த ஒளிப்பதிவை வைத்து உடனடியாக சிவிஜில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கி குறிப்பிட்ட வாகனத்தினை உடனடியாக பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தேர்தலுக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் பறக்கும்படை, நிலைகண்காணிப்பு குழுவினர் பணிகளில் சுனக்கம் இல்லாமல் முக்கியமாக இரவு நேரங்களில் பணியில் உள்ள அனைத்து குழுவினர்களும் ஒருங்கிணைந்து வாகன சோதனையினை மேற்கொள்ளவேண்டும். சோதனை பணிகளின்போது வாகனங்களில் இருந்து ஏதேனும் ரொக்கபணம், மதுபானம், பரிசு பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டால் உடனடியாக சிவிஜில் கட்டுப்பாட்டு அறையில் உள்ள நியமன அலுவலர்களுக்கு தகவல் வழங்க வேண்டும்.

கட்டுப்பாட்டு அறையில் உள்ள நியமனஅலுவலர்கள் சிவிஜில் மூலம் வரும் புகார்களை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். உதவி தேர்தல்நடத்தும் அலுவலர்கள் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே பறக்கும்படை மற்றும் நிலைகண்காணிப்பு குழுவினர் தேர்தல் நெருங்கும்பட்சத்தில் தொய்வின்றி சோதனை பணிகளில் ஈடுபட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

The post 14 நாட்களில் மக்களவை தேர்தல் பறக்கும்படை தொய்வின்றி பணியாற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,District Collector ,Palani ,Villupuram ,Villupuram district ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...