×

இளம் வாக்காளர்களிடம் வாக்களிப்பதை ஊக்குவிக்க தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி, பேரணி

சாத்தான்குளம் : இளம் வாக்காளர்களிடம் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் சாத்தான்குளத்தில் தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டியும், தூத்துக்குடியில் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தியும், இளம் வாக்காளர்களிடம் வாக்களிப்பதை ஊக்குவிக்கவும் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் கலைவாணி ஆலோசனையின் பேரில் வாக்காளர் விழிப்புணர்வு கோலப் போட்டி மற்றும் வாசகம் எழுதும் போட்டி நடந்தது. பிடிஓ சுடலை தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) சின்னத்துரை மற்றும் துணை முதல்வர் ஜமுனாராணி முன்னிலை வகித்தனர்.

கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு கோலங்களை வரைந்தனர். இதனை அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் பார்வையிட்டு பாராட்டினர். மேலும் வாக்காளர் உதவி எண் 1950 வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், மகளிர் திட்ட வட்டார மேலாளர் ரோஸ்லின், வட்டார ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமாரி, புதுக்குளம் ஊராட்சி செயலர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தேர்தல் குழு ஒருங்கிணைப்பாளர்களான கணிதவியல் துறை உதவி பேராசிரியர் பிரேசில், உடற்கல்வி இயக்குநர் ரமேஷ் குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

இதேபோல் தூத்துக்குடியில் மீன்வளக்கல்லூரி மாணவ- மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் அகிலன் தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) உலகநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், வாக்காளர் விழிப்புணர்வு உதவியாளர் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவ, மாணவியர் பேரணியில் கலந்து கொண்டனர். தூத்துக்குடி ஆசிரியர் காலனி மீன்வளக் கல்லூரி குடியிருப்பில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து மில்லர்புரம் ஜங்ஷன் அருகே நிறைவுற்றது. பேரணியின் போது வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கோவில்பட்டியில் துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு

அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும், என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தி கோவில்பட்டி பஸ் நிலையத்தில் வியாபாரிகள், பயணிகள், பொதுமக்களிடம் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தாசில்தார்கள் சரவணபெருமாள், தங்கையா, விஏஓ சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post இளம் வாக்காளர்களிடம் வாக்களிப்பதை ஊக்குவிக்க தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி, பேரணி appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Thoothukudi ,Election Commission ,Dinakaran ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்