×

தூத்துக்குடி எனது 2வது தாய் வீடு

*விளாத்திகுளத்தில் கனிமொழி எம்பி பேச்சு

விளாத்திகுளம் : தூத்துக்குடி எனது 2வது தாய் வீடு என்று விளாத்திகுளத்தில் பிரசாரம் செய்த கனிமொழி எம்பி கூறினார்.தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி எம்பி, தொகுதி முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்து வருகிறார். விளாத்திகுளத்தில் அவர் பேசுகையில், கடந்த முறை தேர்தலில் நிறுத்தப்பட்ட போது சென்னையை பூர்வீகமாக கொண்டவர், தேர்தலுக்கு பிறகு தூத்துக்குடி வரமாட்டார் என எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. ஆனால் என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். அதற்கேற்ப தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். மழை வெள்ளக் காலங்களில் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றியுள்ளேன். தூத்துக்குடி என்னுடைய 2வது தாய் வீடு.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்களைத் தேடி மருத்துவம், நகர பேருந்துகளில் மகளிர் அனைவரும் கட்டணம் இன்றி பயணம் செய்ய பேருந்து வசதி திட்டம், ஏழை மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பள்ளிகளில் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காலை உணவு திட்டம் தற்போது கனடா நாட்டிலும் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு பல்வேறு நாடுகள் பின்பற்றத்தக்க வகையிலான மகத்தான நலத்திட்டங்களை திமுக அரசு வழங்கி வருகிறது.

திராவிட மாடல் என்றதும் பாஜவினருக்கு நடுக்கம் வந்து விடுகிறது. தமிழ் மொழி, திராவிடம் என்றாலே அவர்களுக்கு பிடிப்பதில்லை. தற்போது தேர்தல் வருவதால் பிரதமர் மோடி, வாரத்திற்கு 5 முறை தமிழகத்திற்கு வருகிறார். தமிழையும், தமிழ் மக்களையும் புகழ்ந்து பேசி நான் தமிழனாக பிறந்திருக்கலாமே என்றெல்லாம் நாடகமாடி வருகிறார். ஆனால் மழை வெள்ளம் காலங்களில் நேரில் வந்து மக்களை பார்க்காமலும் நிவாரணத் தொகை வழங்காமலும் தமிழக மக்களை வஞ்சித்து வருகிறார். பிரதமர் தமிழகத்திலேயே தங்கினாலும் பாஜவுக்கு ஓட்டு கிடைக்காது.

இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடிக்கு அதிக ஓய்வு நேரம் இருக்கும், அப்போது தமிழ் ஆசிரியரிடம் தமிழை கற்றுக் கொள்ளலாம். ஏனெனில் நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றுவிடும். சாதி மதத்தை வைத்து அரசியல் செய்யும் பாஜவை தமிழக மக்கள் ஒரு போதும் ஆதரித்து வாக்களிக்க மாட்டார்கள். மணிப்பூர் மாநிலத்தில் 2 சமூகங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி அரசியல் செய்வதே பாஜவின் அரசியல் நிலைப்பாடு. பல்வேறு நாடுகளுக்கு சென்று வரும் பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்திற்கு இதுவரை சென்றதில்லை. இதிலிருந்து பாஜ எந்த வகையில் அரசியல் செய்கிறது என்பதை மக்கள் புரிந்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகால பாஜ ஆட்சியில் காஸ் விலை உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் காஸ், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். டோல்கேட்டுகள் மூடப்படும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக மாற்றப்பட்டு ஊதியமாக ரூ.400 வழங்கப்படும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, பெண் கல்வி உள்ளிட்ட அனைத்திலும் முதன்மையாக தமிழகம் உள்ளது. மீண்டும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எனக்கு மக்கள் பணியாற்ற வாய்ப்பு வழங்க கேட்டுக் கொள்கிறேன், என்றார்.

பிரசாரத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ, விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் மேற்கு அன்புராஜன், மத்திய ராமசுப்பு, கிழக்கு சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணை தலைவர் வேலுச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், விளாத்திகுளம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடி எனது 2வது தாய் வீடு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Kanimozhi ,Vlathikulam Vlathikulam ,Vlathikulam ,DMK ,Thoothukudi Parliamentary Constituency ,
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...