*வனத்துறை நடவடிக்கை
களக்காடு : களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வெயில் கொளுத்தி வருவதால் நீரோடைகள் நீரின்றி வறண்டு வருகின்றன. இதனால் வனவிலங்குகள் குடிநீர் அருந்த தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று துணை இயக்குனர் ரமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
இவைகள் வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் அருந்துவது வழக்கம். இந்நிலையில் கோடை காலம் தொடங்கியதை அடுத்து களக்காடு மலையில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் நீரோடைகள் நீரின்றி வறண்டு வருகின்றன. தலையணையிலும் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுபாடு ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு வனப்பகுதியில் வனவிலங்குகள் குடிநீர் அருந்த 10க்கும் மேற்பட்ட இடங்களில் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொட்டிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து அதில் மோட்டார்கள் பொருத்தி தண்ணீர் எடுத்து நீர் நிரப்பப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணறு இல்லாத இடங்களில் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த தொட்டிகளில் வனவிலங்குகள் கூட்டம், கூட்டமாக நீர் அருந்தி வருவதாகவும், மேலும் தேவையான இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடை காலம் என்பதால் வனவிலங்குகள் இடம் பெற வாய்ப்பு உள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
The post களக்காடு மலையில் நீரோடைகள் வறண்டு வருவதால் வனவிலங்குகளுக்கு குடிநீர் தொட்டி அமைப்பு appeared first on Dinakaran.