×

எடையூரில் தண்ணீர் வராததால் குடிநீர் குழாயை சேதப்படுத்தி மறியல்: நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன

 

முத்துப்பேட்டை, ஏப். 5: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் பகுதிகளுக்கு அங்குள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் எடையூர் ஊராட்சி மன்ற வளாகத்தில் உள்ள டேங்க் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் புதுதெரு உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள குடிநீர் டேங்க்கிற்கு வந்து அதில் பொருத்தப்பட்ட குழாய்களை உடைத்து சேதப்படுத்தினர்.

பின்னர் கடைத்தெருவிற்கு வந்த மக்கள் அங்குள்ள கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எடையூர் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் நேற்று மாலைக்குள் குடிநீர் கிடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து தடைப்பட்டு சாலை இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post எடையூரில் தண்ணீர் வராததால் குடிநீர் குழாயை சேதப்படுத்தி மறியல்: நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன appeared first on Dinakaran.

Tags : Muthuppettai ,Thiruvarur District ,Muthuppet ,Edaiur Orratchi ,Dinakaran ,
× RELATED முத்துப்பேட்டையில் தொடக்கப்பள்ளி சார்பில் ஐம்பெரும் விழா