×

அதிமுக மாஜி எம்எல்ஏ உறவினர் வீட்டில் ரூ.40 லட்சம் சிக்கியது: பணம் பட்டுவாடா செய்ய பதுக்கியதா?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் வருமான வரித்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் திருநாதமுதலியார் தெருவை சேர்ந்த நவீன்குமார்(35) என்பவரது வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு வந்தனர். அப்போது வீட்டில் இருந்தவர்களிடம் இருந்து செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டு அதிகாலை 2 மணி வரை சோதனை நடத்தினர். அதில், முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரூ.40 லட்சம் பணம் சிக்கியதாக தெரிகிறது. இதையடுத்து அதிகாரிகள் பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நவீன்குமார் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் ஸ்டூடியோ வைத்துள்ளார். மேலும் பைனான்ஸ், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், அதிமுகவை சேர்ந்த திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷின் சகோதரி மருமகன் ஆவார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் பணம் பட்டுவாடா செய்தவற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நவீன்குமார் ஏற்கனவே அட்சயபாத்திரம் மூலம் அள்ள, அள்ள பணம் கிடைக்கும் எனக் கூறியதால் ஆந்திராவில் இருந்து ரூ.50 லட்சத்துக்கு அட்சயபாத்திரத்தை வாங்கி வந்து வீட்டில் வைத்து பூஜை செய்து ஏமாற்றம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அதிமுக மாஜி எம்எல்ஏ உறவினர் வீட்டில் ரூ.40 லட்சம் சிக்கியது: பணம் பட்டுவாடா செய்ய பதுக்கியதா? appeared first on Dinakaran.

Tags : AIADMK ,MLA ,Tamil Nadu ,Puducherry ,Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டையில் அதிமுக முன்னாள்...