×

வடஇந்திய கட்சியான பாஜவுக்கு வாக்களிங்க…கோவை, திருப்பூரை பிரித்து குஜராத்துடன் இணைக்கப்படும்..

கோவையில் காந்திபார்க், ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட், சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் இந்தி மொழி பேசும் வடஇந்தியர்கள் பலர் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் இப்பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பாஜ வேட்பாளர் அண்ணாமலை இந்தி மொழியில் பேசி வாக்குகளை சேகரித்தார். இப்பகுதிகளில் உள்ள வட இந்தியர்களின் வாக்குகளை பெற காந்திபுரம், ரயில் நிலையம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தி மொழியில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

வட இந்திய ஒற்றுமை மன்றம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், ‘‘சகோதர சகோதரிகளே இந்த முறை வட இந்திய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். குஜராத்தின் சிங்கம் மோடிக்கு தமிழக பாஜ தலைவர் மிகவும் விசுவாசமானவர். பிஜேபி ஜெயிக்கட்டும். அண்ணாமலைக்கு வாக்களியுங்கள். கோவையையும், திருப்பூரையும் தமிழ்நாட்டில் இருந்து பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றி அவை குஜராத்துடன் இணைக்கப்படும். ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜே’’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.

மான்செஸ்டர் சிட்டி என்று அழைக்கப்படும் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த போஸ்டரில் தலைவர்கள் படமோ, கட்சியின் சின்னங்களோ இல்லை. இந்த போஸ்டர் பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பதில் அளித்துள்ள ெநட்டிசன்கள், ‘‘கோவையையும், திருப்பூரையும் தமிழ்நாட்டில் இருந்து பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதாக தெரிவிக்கப்பட்டிருப்பதை கற்பனையாக சிலர் நினைக்கலாம்.

ஆனால் காஷ்மீர் மாநிலத்தை பிரித்து துண்டாக்கியது மோடி அரசு என்பதால் இந்த போஸ்டரில் உள்ள தகவலையும் புறம் தள்ள முடியாது’’ என விமர்சித்துள்ளார்கள். பிரிவினை, கலவரத்தை தூண்டும் விதமாக இந்த போஸ்டர்கள் உள்ளதாகவும், இவற்றை ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தபெதிக போன்ற அமைப்பினர் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளனர். சில வட இந்தியர்கள் இது சாத்தியம் என நம்புவதாக சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post வடஇந்திய கட்சியான பாஜவுக்கு வாக்களிங்க…கோவை, திருப்பூரை பிரித்து குஜராத்துடன் இணைக்கப்படும்.. appeared first on Dinakaran.

Tags : Indian party ,BJP ,Coimbatore ,Tirupur ,Gujarat ,Gandhi Park ,RS Puram ,Flower Market ,Saibaba Colony ,Annamalai ,Dinakaran ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...