×

வனப்பகுதியில் தீவைத்த வாலிபர் கைது

தேனி, ஏப். 5: தேனி அருகே வரட்டாறு வனப்பகுதியில் தோட்டங்களில் போர்வெல்லுக்கு பயன்படுத்தும் மின்வயர்களை திருடி வந்து, காப்பர் எடுப்பதற்காக வனப்பகுதியில் வயர்களை தீவைத்த வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மற்றொரு வாலிபரை தேடி வருகின்றனர். தேனி அருகே தேனி வனச்சரகத்திற்குட்பட்ட வரட்டாறு பீட், கைலாசநாதர் கோயில் காப்புக்காடு நிலப்பகுதியில் நேற்று முன்தினம் காலை தீப்பற்றி எரிந்தது. இதனையறிந்து தேனி வனச்சரகர் செந்தில் தலைமையில் வனத்துறையினர் அங்கு தீயை அணைக்க சென்றனர்.

அப்போது, அப்பகுதியில் இரண்டு வாலிபர்கள் கையில் வயர்களுடன் சுற்றித் கொண்டிருந்தனர். வனபணியாளர்கள் அவர்களை நோக்கிச் சென்றனர். வனத்துறையினர் வருவதைப் பார்த்த ஒரு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அங்கிருந்த பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியைசேர்ந்த மலைச்சாமி மகன் ராஜ்குமார் வனத்துறையினரிடம் சிக்கினார். அவரிடம் விசாரித்தபோது, இப்பகுதிகளில் உள்ள தோட்டங்களில் போர்களுக்கு பயன்படுத்தும் மின்வயரை திருடி வந்து, வயரை எரித்து காப்பர் கம்பிகளாக்கி விற்பனை செய்ய வனப்பகுதியில் தீவைத்து எரித்ததாக கூறினார். இதனையடுத்து, ராஜ்குமார் மீதும், இவருக்கு உடந்தையாக இருந்து தப்பியோடிய அவரது சகோதரர் சிவா மீதும் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வனப்பகுதியில் தீவைத்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Theni ,Varattaru forest ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்