×

தலைமை தேர்தல் அதிகாரி விழிப்புணர்வு பாட்டு: 100 சதவீதம் வாக்களிப்போம் தேர்தலை திருவிழாவாக மாற்றுவோம்

சென்னை: தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து நடிகர், நடிகைகளை வைத்து விழிப்புணர்வு நிகழச்சிகள் நடத்தப்படும். அதேபோன்று, தேர்தலில் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் விளம்பர படங்கள் வெளியாகும். தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவில் நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி மட்டும் கண்டிப்பாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கூறிய செய்தி தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ‘‘உன் உரிமை, உன் கடமை” என்ற தலைப்பில் தனது சொந்த குரல் தமிழில் பாடிய பாடலை நேற்று வெளியிட்டு உள்ளார். இந்த பாடலுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார்.
அதில், ‘‘சிறகை விரித்து பறக்கும் பறவை இனம் போல, 18 வயது தொட்டால் துள்ளிக் குதிக்கும் மனமே, ஓ…

உன் உரிமை காட்டிடும் வயது இது கேளாய், உன் கடமை செய்திடும் வயது இது கேளாய், உன் கடமை செய்திடும் நேரம் இது பாராய், முதல் மை வைத்து நீ நாட்டுக்காக வாக்களி…. 100 சதவீதம் வாக்களிப்போம் தேர்தலை திருவிழாவாய் மாற்றுவோம்” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அழகான தமிழில் பாடியுள்ளார். சத்யபிரதா சாகு ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு தமிழ் சரளமாக பேச வராது. ஆனால், கடுமையான பயிற்சிக்கு பிறகு தேர்தல் விழிப்புணர்வுக்கான பாடலை அழகான தமிழ் உச்சரிப்புடன் பாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நேற்று இந்த பாடல் சமூகவலைதளங்களில் வைரலானது.

The post தலைமை தேர்தல் அதிகாரி விழிப்புணர்வு பாட்டு: 100 சதவீதம் வாக்களிப்போம் தேர்தலை திருவிழாவாக மாற்றுவோம் appeared first on Dinakaran.

Tags : Chief Electoral Officer ,CHENNAI ,
× RELATED மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை...