×

தமிழகத்தில் 1,694 புகார்கள் பதிவு விதிகளை மீறும் நபர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தண்டனை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1,694 புகார்கள் பதிவாகியுள்ளது. மேலும் தேர்தல் விதிமீறும் நபர்கள் மீது ஐபிசி சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதன் முதலில் 1951ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதெல்லாம், தேர்தல் நடத்தை விதிகள் என்று தனியாக எதுவுமில்லை.

கேரளத்தில் 1960ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றபோது சில விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. அதுதான் முதன்முதலில் அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகள். அதன் பிறகு ஆளும் கட்சியினர் தங்கள் பதவியைத் தவறாகப் பயன்படுத்திவிட கூடாது என்பதற்காக 1979ல் முதன் முதலில் தேர்தல் நடத்தை விதிகளை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியது. தேர்தல் நடத்தை விதிகள் எந்த ஒரு சட்டத்தின் கீழும் அமலாகவில்லை. எனினும் இதன் சில விதிகள் இபிகோ சட்டத்தின் கீழ் அமலாகின்றன.

இந்நிலையில் நாட்டின் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் மிக முக்கியமான பணியை தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு தேர்தலை நடத்தும்போது, அதில் எந்த இடத்திலும் முறைகேடு நடைபெறக் கூடாது என்பதற்காக, பல்வேறு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. அதன்படி தேர்தல் விதிகளை மீறும் எந்த ஒரு நபரும் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவார்.

மேலும் தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களைத் தெரிவிக்க சி-விஜில் (cVIGIL) என்ற செயலியையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதை புகைப்படம் அல்லது வீடியோ பதிவு செய்து அனுப்பலாம். அதில் அனுப்பக்கூடிய புகார்கள், தகவல்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு அனுப்பப்படும். அவர் அதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ச்சி செய்வார்.

அந்த வகையில் நேற்று காலை நிலவரப்படி தேர்தல் விதிமீறல் தொடர்பாக சி-விஜில் செயலி மூலம் தமிழகத்தில் 1,694 புகார்கள் பதிவாகியுள்ளன. அதிகப்படியாக கரூர் மாவட்டத்தில் இருந்து பெறப்பட்ட 372 புகார்கள் உண்மைத் தன்மையுடையவை என கண்டறியப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக சென்ைன மாவட்டத்தில் 3 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் 209 புகார்கள் உண்மைத்தன்மையுடையவை என கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல சில மாவட்டங்களிலிருந்து ஆதாரங்களுடன் புகார்கள் எதும் வரவில்லை என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் விதிமீறலுக்கான தண்டனை சட்டங்கள்

* மதம், இனம், பிறந்த இடம், இருப்பிடம், மொழி ஆகியவற்றை கொண்டு பல்வேறு பிரிவுகளுக்கு இடையே மோதலை உருவாக்குதல், மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தல், இவற்றுக்கு இபிகோ 153 ஏ – சட்டத்தின் படி 5 ஆண்டுகள் வரை அல்லது அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உண்டு.

* பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிடுதல், வெறுப்பூட்டும் வகையில் நடத்து கொள்ளுதல் அல்லது இது தொடர்பான கருத்துக்களை அச்சடித்தல் அல்லது மக்களிடையே புழக்கத்தில் விடுதல் ஆகியவற்றுக்கு இபிகோ 505(2) சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் வரை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

* வேட்பாளரின் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் இல்லாமல் பொதுக்கூட்டத்தை நடத்துதல் அல்லது விளம்பரம் செயதால் ஆகியவற்றுக்கான செலவுகளை வேட்பாளர் ஏற்க வேண்டும். அல்லது வேட்பாளரை மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் பிரசுரங்களை அச்சடித்தல் ஆகியவை இபிகோ 171எச் சட்டத்தின் கீழ் தண்டனையுடன் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

* 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 125 சட்டத்தின் படி தேர்தல் தொடர்பாக இரண்டு பிரிவுகளுக்கு இடையே மோதலை உருவாக்கினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும்.

The post தமிழகத்தில் 1,694 புகார்கள் பதிவு விதிகளை மீறும் நபர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தண்டனை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Election Commission ,Chennai ,Dinakaran ,
× RELATED நடத்தை விதிகளை பின்பற்றி தண்ணீர்...