×

வேட்பாளர்களிடமிருந்து வாக்களிக்க பணம் பெற்றது நிரூபிக்கப்பட்டால் வாக்காளர்கள் மீதும் நடவடிக்கை: தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

சென்னை: பொதுமக்களுக்கு வேட்பாளர்கள் வாக்களிக்க பணம் கொடுப்பதும் குற்றம், பொதுமக்களும் வாக்களிக்க வேட்பாளர்களிடம் பணம் பெறுவது நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்தார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று அளித்த பேட்டி: வேட்பாளர்கள் தவிர தனியார் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட விழாக்கள் மண்டபங்களில் நடத்தலாம்.

ஆனால் அங்கு நேரில் வந்து மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் போலீசார் விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நேற்று முன்தினம் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, தேர்தல் முன்னேற்பாடுகள், பக்கத்து மாநிலங்களுடன் தகவல்களை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சி-விஜில் ஆப் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்க முன் வர வேண்டும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, சுவர் விளம்பரம், 10 மணிக்கு மேல் பிரசாரம் உள்ளிட்ட தகவல்களை இந்த ஆப் மூலம் நேரடியாக புகார் கொடுக்க முடியும். அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் கடந்த 3ம் தேதி வரை 71,168 புகார்களும், கர்நாடகாவில் 13,959, ஆந்திராவில் 7,055 புகார்களும் சி-விஜில் மூலம் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2,168 புகார்கள் மட்டுமே வந்துள்ளது. தமிழக மக்களிடம் சி-விஜில் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். புகார் தெரிவித்த 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

வேட்பாளர்கள் வாக்களிக்க பொதுமக்களுக்கு பணம் கொடுப்பது குற்றம். அதேபோன்று, பொதுமக்களும் வாக்களிக்க வேட்பாளர்களிடம் பணம் பெறுவதும் குற்றம். இதுபற்றி சி-விஜில் ஆப் மூலம் புகார் அளித்தால் தேர்தல் விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் இயந்திரமான விவி-பேட் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்படும். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள விவி-பேட் இயந்திரத்தில் உள்ள வாக்குகளை ரேண்டம் முறையில் தேர்வு செய்து எண்ணப்படும்.

இதில் பதிவாகும் வாக்குகளை 5 வருடம் வரை பாதுகாப்பாக வைக்க முடியும். மற்றபடி, வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வாக்குகளை 45 நாட்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். அதற்குள் புகார் தெரிவிக்கலாம். நீதிமன்ற வழக்கு இருக்கும் பட்சத்தில், அந்த வழக்கு முடியும் வரை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் பாதுகாப்பாக வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

* இதுவரை 13 லட்சம் பேருக்கு பூத் சிலிப்
கடந்த 1ம் தேதியில் இருந்து இதுவரை 13 லட்சம் பேருக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பூத் சிலிப் 13ம் தேதிக்குள் வழங்கப்பட்டு விடும்” என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

The post வேட்பாளர்களிடமிருந்து வாக்களிக்க பணம் பெற்றது நிரூபிக்கப்பட்டால் வாக்காளர்கள் மீதும் நடவடிக்கை: தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chief Electoral Officer ,CHENNAI ,Tamil Nadu ,Sathyapratha Saku ,Chief Secretariat ,Dinakaran ,
× RELATED மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை...