புதுடெல்லி: சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டம், பணமோசடி தடுப்பு சட்டப்பிரிவுகள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி அளித்துள்ளது. 2024 மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்தும் ஒற்றை குறிக்கோளுடன் 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ் கம்யூனிஸ் கட்சி அங்கம் வகிக்கிறது. மக்களவை தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை டெல்லியில் கட்சியின் பொதுசெலயாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் மூத்த தலைவர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத் ஆகியோர் நேற்று கூட்டாக வௌியிட்டனர். அந்த அறிக்கையில், பாஜ அரசை தோற்கடிக்கவும், ஒன்றியத்தில் மதசார்பற்ற மாற்று அரசை அமைக்கவும், மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகளின் பலத்தை அதிகப்படுத்தவும் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில், “அரசியலில் இருந்து மதம் பிரிக்கப்பட்டது என்ற கொள்கையை கடைப்பிடிக்க எவ்வித சமரசமுமின்றி போராடுவோம். கடுமையான சட்டங்களாக சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டம்(உபா), பணமோசடி தடுப்பு சட்டங்கள் நீக்கம்(பிஎம்எல்ஏ), 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டம், வெறுப்பு பேச்சு, குற்றங்களுக்கு எதிரான சட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய கட்சி துணை நிற்கும். பெரும் பணக்காரர்களுக்கு வரி விதிப்பது, பொது சொத்து வரி மற்றும் பரம்பரை வரி தொடர்பான சட்டம் அறிமுகப்படுத்தப்படும். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பட்ஜெட் இரண்டு மடங்காக அதிகரிப்பு, நகர்ப்புற வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த புதிய சட்டம்” ஆகிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
The post உபா, பணமோசடி தடுப்பு சட்டங்கள் ரத்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையில் உறுதி appeared first on Dinakaran.