பெங்களூரு: விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகா லச்யானா கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீஷ் – பூஜா தம்பதி. இவர்களுக்கு சாத்விக் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. சதீசின் தந்தை சங்கரப்பா வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், விளைநிலத்தில் நேற்று முன்தினம் புதியதாக ஆழ்துளை கிணறு ஒன்றை அமைத்தார். 40 அடி தோண்டிய நிலையில் தண்ணீர் வராததால் பணியை கைவிட்டனர். ஆனால், அந்த ஆழ்துளை கிணற்றை மூடாமல் விட்டுள்ளனர். நேற்று முன்தினம் மாலையில் குழந்தை சாத்விக், விளைநிலத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது, ஆழ்துளை கிணற்றில் தவறி தலைகுப்புற விழுந்தான். 16 அடி ஆழத்தில் சிக்கிய அவனது அழுகை குரல் கேட்டு பெற்றோர் கதறி அழுதனர்.
இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோருடன் வந்து குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் மீட்பு பணிகள் தொடங்கிய நடைபெற்று வந்த நிலையில் பக்கத்திலேயே 20 அடி ஆழ குழி தோண்டி அதன் வழியாக நேற்று மதியம் 2.30 மணியளவில் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. சுமார் 20 மணிநேர போராட்டத்திற்கு பிறகு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் நிம்மதி அடைந்தனர். மீட்கப்பட்ட குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post 20 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.