×

சில்லி பாய்ன்ட்…

* மும்பை இந்தியன்ஸ் அணியின் நடுகள வீரர் சூரியகுமார் யாதவ், அணியுடன் இன்று இணைய உள்ளார். டி20 கிரிக்கெட் உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சூரியகுமார் காயம் காரணமாக பெங்களூர் கிரிக்கெட் அகடமியில் சிகிச்சையும், பயிற்சியும் பெற்று வந்தார். மும்பை அணி நாளை மறுதினம் டெல்லி அணிக்கு எதிராக விளையாட உள்ளது. தொடர் தோல்வியில் சிக்கித் தவிக்கும் மும்பை, இவர் வருகைக்கு பிறகு மீளும் என்ற தமிழ் வர்ணனையாளர்கள் எதிர் பார்க்கின்றனர்.
* கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட் ஆட்டத்தை தாமதம் செய்ததால் அவருக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த அணிக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரிஷபுக்கு மட்டும் 24 லட்சமும், ‘இம்பேக்ட்’ வீரர்கள் உட்பட ஆடும் அணியில் இடம் பெற்ற எல்லா வீரர்களுக்கும் ஆட்டத்துக்கான ஊதியத்தில் 25சதவீதம் அல்லது ரூ.6லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது. நடப்புத் தொடரில் சென்னைக்கு எதிரான போட்டியிலும் ஆட்டத்தை தாமதப்படுத்தியதாக ரிஷபுக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து 2வது முறையாக தவறு நடந்ததால் அவருக்கான அபராதம் 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி ஜாம்ஷெட்பூர் எப்சி அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்ற ஆட்டத்தின் விறுவிறுப்பான காட்சி. இந்த வெற்றியின் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை சென்னை அணி தக்க வைத்துள்ளது.
* டெல்லி-கொல்கத்தா இடையிலான ஆட்டம் வரை 16 லீக் ஆட்டங்கள் நடந்துள்ள நிலையில் இதுவரை யாரும் சதமடிக்கவில்லை. அதிகபட்சமாக கொல்கத்தா வீரர் சுனில் நரைன் நேற்று முன்தினம் டெல்லிக்கு எதிராக 85 ரன் குவித்தார்.
* மேலும் 15 வீரர்கள் அரை சதங்கள் விளாசி உள்ளனர். இந்த வீரர்களில் கோஹ்லி, ரியான் பராக், ஹென்ரிச் கிளாஸன், ரிஷப் பன்ட், டி காக் என 5 வீரர்கள் தலா 2 அரை சதங்கள் அடித்துள்ளனர். மற்ற வீரர்களின் பங்கில் தலா ஒரு அரை சதம் உள்ளது.
* ஒரே ஆட்டத்தில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஐதராபாத் வீரர் கிளாஸன் முறையே 8, 7 சிக்சர்கள் விளாசி முதல் மற்றும் 4வது இடத்தில் உள்ளார். ரஸ்ஸல்(கொல்கத்தா), அபிஷேக் சர்மா(ஐதராபாத்), சுனில் நரைன்(கொல்கத்தா) ஆகியோர் தலா 7சிக்சர்கள் விளாசி முறையே 2, 3, 5வது இடத்தில் உள்ளனர்.
* ஒரே ஆட்டத்தில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் கோஹ்லி 11 பவுண்டரிகளுடன் முதல் இடத்திலும், ஐதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரிகளுடன் 2வது இடத்திலும் இருக்கின்றனர்.
* இதுவரை நடந்த ஆட்டங்களில் டெல்லி வீரர் கலீல் அகமது மட்டுமே ஒரே ஒரு மெய்டன் ஓவர் வீசியுள்ளார். கூடவே ரன் ஏதும் தராத ‘டாட்’பந்துகளை அதிகம் வீசிய வீரராகவும் கலீல் உள்ளார்.
இவர் 4 ஆட்டங்களில் விளையாடி 16ஓவர்கள் வீசியதில் அதாவது 96பந்துகளில் 48 பந்துகளில் ரன் ஏதும் தரவில்லை.
* சென்னையின் எப்சி கால்பந்து அணியை மேம்படுத்த இங்கிலாந்து கால்பந்து கிளப்பான நார்விச் சிட்டி எப்சி அணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சென்னை அணியின் துணைத் தலைவர் ஏகனாஷ் குப்தா, நார்விச் சிட்டி எப்சி அணியின் வணிக இயக்குநர் சாம் ஜெஃப்ரி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது இருவரும் தங்கள் அணிகளின் சீருடைகளை மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து பேசிய ஏகனாஷ், ‘சுமார் 120 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் புகழ் பெற்ற இங்கிலாந்து கிளப்புடன் இணைந்து செயல்படுவதின் மூலம் எங்கள் அணி மேம்படும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த 3 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தின் மூலம் எவ்வளவு செலவாகும் என்பதை திட்டமிடவில்லை’ என்றார். சாம் ஜெஃப்ரி பேசும் போது, ‘இந்தியா வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டு பொருளாதாரத்தை கொண்டுள்ளது. சென்னை அணியுடன் இணைந்து செயல்படும் அணி மேம்பாடுகள் மட்டுமின்றி, இரண்டு தரப்புக்கும் வணிக வாய்ப்புகள் பயன் உள்ளதாக அமையும்.’ என்றார்.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : Mumbai Indians ,Suryakumar Yadav ,Suryakumar ,T20 ,Bangalore Cricket Academy ,Mumbai… ,Dinakaran ,
× RELATED மும்பை – லக்னோ இன்று பலப்பரீட்சை