×

வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு ஆகியவை தான் பாஜ அரசின் சாதனை: கொளத்தூர் பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு

சென்னை: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து துறைமுகத்திலும், வடசென்னை தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து, கொளத்தூரிலும் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டங்களில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நிதியமைச்சர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியை இழந்தபோது விட்டுச் சென்ற 100 நாள் வேலை திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், கல்வி உரிமைச்சட்டம் போன்ற திட்டங்களால் தான் நாடு ஓரளவு ஓடியது. ஆனால், பாஜ அரசு எதை விட்டுச் சென்றுள்ளது என்றால் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு இவற்றைத்தான் விட்டுச் செல்கிறது. இதுதான் அவர்களது சாதனை.

சர்வதேச தொழிலாளர் நிறுவனம் ஆய்வு செய்து ஒரு அறிக்கையை தந்துள்ளது. அதில், இந்தியாவில், 65 சதவீதமாக வேலைவாய்ப்பின்மை உயர்ந்துள்ளது என கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை நாளை (இன்று) வெளியிடப்படுகிறது. அதில் வேலைவாய்ப்பை எப்படி உருவாக்குவது என்பது குறித்து ஒரு தனி அத்தியாயமே இருக்கிறது. ஒன்றிய அரசு நிறுவனங்களில் உள்ள 30 லட்சம் காலியிடங்கள் உள்ளன. பட்டதாரிகள் 42 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். ஏன் மோடி அவர்கள் காலிபணியிடங்களை பூர்த்தி செய்யவில்லை.

இந்த 30 லட்சம் காலியிடங்களை நாங்கள் ஓராண்டில் நிரப்புவோம். அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் அவர்கள் என்ன திட்டங்களை செய்தார்கள் என சொல்ல முடியுமா. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசு பெண்கள் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட மகத்தான திட்டங்களை நிறைவேற்றியுள்ளன. கச்சத்தீவு விவகாரத்தை பொறுத்தவரை 27.1.2015 அன்று நரேந்திர மோடி பிரதமர். அப்போது ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.

அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அந்த கடிதத்தில், கச்சத்தீவை யாரும், யாருக்கும் தாரை வார்க்கவில்லை. யாரும் கச்சத்தீவை கைப்பற்றவில்லை. யாரும் கச்சத்தீவை கைவிடவில்லை. இது ஒரு உடன்பாடு’ என கூறியுள்ளனர். அந்த உடன்பாட்டின் படி 6 லட்சம் தமிழர்களை இந்தியாவுக்கு வரவழைத்து குடியுரிமை வழங்கினோம். தற்போது இதற்கு அடுத்து வந்த கடிதத்தை வைத்துதான் அண்ணாமலை பேசி வருகிறார். ஏன் இந்த கடிதத்தை பற்றி அண்ணாமலையும், ஜெய்சங்கரும் பேச மறுக்கிறார்கள். தற்போது இந்த கடிதம் சிக்கியதால் அவர்களின் குட்டு அம்பலமாகிவிட்டது. இந்த 10 ஆண்டுகளில் ஏன் கச்சத்தீவு பிரச்னையை எழுப்பவில்லை. இவ்வாறு பேசினார்.

The post வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு ஆகியவை தான் பாஜ அரசின் சாதனை: கொளத்தூர் பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP government ,P. Chidambaram ,Kolathur ,CHENNAI ,Central ,Chennai DMK ,Dayanithi Maran ,Harbour, North Chennai DMK ,Kalanithi Veerasamy ,Minister ,Shekharbabu ,Mayor ,Priya ,West District Congress ,
× RELATED பரம்பரை சொத்துவரிக்கு எதிரான...