×

பள்ளிப்பட்டில் மூடப்பட்டிருந்த செல்போன் டவரில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் திருட்டு: இருவர் கைது

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டில் செல்போன் டவரில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்களை திருடி விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான இடத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் டவர் அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேவைகள் நிறுத்தப்பட்டு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜியோ நிறுவனம் சார்பில் நெட்வொர்க் சேவைகள் வழங்குவதற்காக நிறுவன ஊழியர்கள் மூடப்பட்டிருந்த டவரை சென்று பார்த்தனர். அப்போது அந்த டவர் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டர், ஸ்டெபிலைசர், பேட்டரி, கேபிள் போன்ற மின்சாதன பொருட்கள் திருடுபோயிருப்பது தெரியவந்தது‌.

இச்சம்பவம் தொடர்பாக ஜியோ நிறுவனம் சார்பில் பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், செல்போன் டவர் அமைந்துள்ள இடத்திற்கு பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாததாலும், ஒப்பந்தம் காலாவதியானதாலும், அங்கிருந்த மின்சாதன பொருட்களை இடத்தின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, அரக்கோணம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(31), திருத்தணியை சேர்ந்த பூபதி ஆகிய மூன்று பேர் சேர்ந்து திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் முத்துக்குமார் மற்றும் பூபதி ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.

The post பள்ளிப்பட்டில் மூடப்பட்டிருந்த செல்போன் டவரில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் திருட்டு: இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Pallipat ,Reliance Company ,Krishnamurthy ,Pallipattal, Tiruvallur district ,
× RELATED பள்ளிப்பட்டில் சேதமடைந்த மின் கம்பங்கள்: மாற்றியமைக்க கோரிக்கை