×

ஜெனரேட்டர் பழுது காரணமாக சீமான் பிரசாரத்தில் திருட்டு மின் இணைப்பு: பொதுமக்கள் அதிருப்தி

குன்றத்தூர்: நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பேசிய பிரசார வாகனத்திற்கு, மின் கம்பத்தில் கொக்கி போட்டு திருட்டு மின்சாரம் பயன்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.  ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் ரவிச்சந்திரனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று இரவு, குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே பிரதான சாலையில் பிரசாரம் செய்தார். குறுகலான சாலையில் அணிவகுத்த கட்சி வாகனங்களால், நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் கடும் அவதிக்குள்ளாகினர். அதனைத்தொடர்ந்து சீமான் பேசுகையில், ‘‘கட்சிகள் எல்லாம் கார்பரேட் நிறுவனங்கள் போல் மாறி விட்டது. பூமி என்பது மண் அல்ல தாய். தலைவர்களை நம்பி கூட்டணி வைப்பவர்கள் அல்ல நாங்கள்.

வருங்கால தம்பிகளை நம்பி கூட்டணி வைக்கிறோம். மூன்று கட்சிகளும் கூட்டணி வைத்துள்ளார்கள். அவ்வளவு தான் மக்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை. நாங்கள் மக்களை நம்புகிறோம். அதனால் தான் தனித்துப் போட்டியிடுகிறோம். தலைவர்கள், தொண்டர்களாக வராமல் உங்கள் வீட்டுப் பிள்ளைகளாக பணியாற்ற வருகிறோம். தலைநகரிலேயே இந்த கட்டமைப்பு என்றால் உட்பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கும். ஒரு நாள் ரேஷன் கடையே இருக்காது. உலக வர்த்தக மையத்தில் கையெழுத்து போட்டு உள்ளனர். திரைப்படத்தில் நடித்தால் போதும் நாட்டை ஆளலாம் என்ற ஒரு பார்வை வந்து விட்டது. இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் ஏதும் செய்யாமல் இனி வரும் காலங்களில் எப்படி செய்வார்கள், என்று மைக்கை பிடித்து மூச்சுமூட்ட பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது மைக் மற்றும் லைட்டுக்கான மின் இணைப்பில் திடீரென்று தடை ஏற்பட்டதால் சீமான் தனது பேச்சை நிறுத்தினார். இதனிடையே ஜெனரேட்டரில் இருந்து குபு…குபு….குபு என கரும்புகை வெளியேறியதைக் கண்டு அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அருகில் இருந்த மின் கம்பத்தில் ஏறி சட்டவிரோதமாக கொக்கி போட்டு மின்சாரத்தை திருடி மைக் மற்றும் லைட்டுக்கு மின் இணைப்பு வழங்கினர். அதனைத்தொடர்ந்து, சீமான் வழக்கமான பிரசாரத்தை பேசி முடித்தார். மேடைக்கு மேடை நீதி, நேர்மை என்று வாய் கிழிய பேசும் சீமான், பிரசாரத்திற்கு மின்சாரத்தை திருடி பிரசாரம் செய்தது சரியா, என்று பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இது ஒருபுறம் இருக்க சீமானின் தேர்தல் பிரசாரத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் சீராக பலமணி நேரமானதால் பொதுமக்கள் புலம்பித் தவித்தனர்.

The post ஜெனரேட்டர் பழுது காரணமாக சீமான் பிரசாரத்தில் திருட்டு மின் இணைப்பு: பொதுமக்கள் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Seaman Prasaran ,Kunradthur ,Seeman ,Naam Tamilar Party ,Ravichandran ,Naam Tamil Party ,Sriperumbudur ,Seaman ,Dinakaran ,
× RELATED குன்றத்தூர் முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை: திரளான பெண்கள் வழிபாடு