×
Saravana Stores

மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்காக தனியார் பள்ளி வாகனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: ஜிபிஎஸ், சிசிடிவி பொருத்த உத்தரவு

சென்னை: தனியார் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:
தனியார் பள்ளிகளில் மாணவ மாணவியருக்காக இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் கட்டாயமாக பெண் உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் நியமிக்க வேண்டும். பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்களை இயக்கும் ஓட்டுநரின் உரிமத்தை பள்ளி நிர்வாகம் அவ்வப்போது சரிபார்த்து அவை காலாவதியாவதற்கு முன்பே அவற்றை புதுப்பிக்க அறிவுறுத்த வேண்டும்.

பள்ளி வாகனங்களில் உதவியாளர்களை நியமிக்கும் போது அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான போலீசார் சான்று சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவரிடம் மருத்துவ சான்று சமர்ப்பிக்க வேண்டும். அந்த உதவியாளருக்கு போக்குவரத்து துறையால் அளிக்கப்படும் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு நாள் புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். தினமும் சுவாச சோதனை மேற்கொள்ள வேண்டும். அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும். சிசிடிவி தரவுகள் அனைத்தும் குறைந்த படசம் 6 மாதம் பராமரிக்கப்பட வேண்டும். பின்னர் காவல் துறையில் ஒப்படைக்க வேண்டும். போக்கு வரத்து துறையிட மிருந்து பள்ளி வாகனம் என்பதற்கான அனுமதி பெறப்பட்டு இயக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாகனத்துக்கும் தரச்சான்று புதுப்பிக்கப்பட வேண்டும். பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி கண்டிப்பாக வைக்க வேண்டும்.

தீயணைப்பு கருவி பொருத்தப்படுவதுடன், அதை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும். பள்ளிகளின் தொலைபேசி எண்கள் வாகனங்களில் எழுதப்பட வேண்டும். பள்ளி வாகனங்களில் முன், பின் சக்கரங்களின் இடையே பாதுகாப்பு தடுப்பு கண்டிப்பாக பொருத்த வேண்டும். காலாவதியான வாகனங்களை கண்டிப்பாக இயக்க கூடாது. அவசரகாலங்களில் பயன்படுத்தும் வகையில் அவசரகால பொத்தான் பொருத்த வேண்டும். வாகனங்களின் உட்புறத்தில் மாணவ மாணவியர் அறியும் வகையில் அவசர கால உதவி எண்களான 14417, 1098 ஆகியவை எழுதப்பட வேண்டும்.

எந்த ஒரு பள்ளி வாகனத்திலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் மாணவ மாணவியரை அழைத்துச் செல்லக் கூடாது. குழந்தைகள் ஏறும்போதும், இறங்கிச் செல்லும் போதும் வாகனத்துக்கு அருகிலோ, பின்புறத்திலோ குழந்தைகள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே வாகனங்களை இயக்க வேண்டும். குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வந்த பிறகு அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் குழந்தைகளை ஒப்படைத்தபிறகே வாகனத்தை அங்கிருந்து நகர்த்த வேண்டும்.

அதேபோல, வாகனங்களில் பயணம் செய்யும் மாணவ மாணவியர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி வெளிப்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் மனசுப் பெட்டியை வாகனத்தில் பொருத்த வேண்டும். பள்ளித் தலைமை ஆசிரியர், பள்ளி முதல்வர் மற்றும் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த 2 நபர்கள் உடனடியாக இந்த புகார் பெட்டியில் பெறப்படும் புகார்களின் மீது 24 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரம் ஒரு முறை மாணவ மாணவியருக்கு சாரண சாரணியர் அமைப்புகளில் உள்ள பெண் ஆசிரியர்களை கொண்டு கூட்டம் நடத்தி மாணவர்களிடம் இ ருந்து கருத்துகளை பெற வேண்டும். அந்த கூட்டத்தல் பாலியல் குற்றங்கள் மட்டும் அல்லாமல் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுகிறதா, வாகனம் ஓட்டும் போது செல்பேசியை ஓட்டுநர் பயன்படுத்துகிறாரா, தவறான வழியில் வாகனம் இயக்குவது, வாகனத்தில் புகைபிடிப்பது, போன்ற நிகழ்வுகள் குறித்தும் கேட்கப்பட்டு பள்ளி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

The post மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்காக தனியார் பள்ளி வாகனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: ஜிபிஎஸ், சிசிடிவி பொருத்த உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Directorate of Private Schools ,Dinakaran ,
× RELATED அரசு தேர்வுகள் இயக்கக துணை இயக்குநராக ராமசாமி நியமனம்..!!