- வீரத்துன் தஞ்சை பல்கலைக்கழகம்
- திண்டுக்கல்
- தஞ்சை
- கடல் வரலாறு மற்றும் கடல் தொல்பொருள் திணைக்களம்
- தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்
- நாகராஜ்
- கபிலியபர்
- தின மலர்
தஞ்சை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை முதுகலை மாணவர்கள் திண்டுக்கல் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திண்டுக்கல் அடுத்த காப்பிலியபட்டியில் மரத்தாலான ஒரு வீரத்தூண் உள்ளதாக காப்பிலியபட்டியைச் சேர்ந்த பேராசிரியர் நாகராஜ் தகவல் அளித்தார். அதன்பேரில் முதுகலை தொல்லியல் மாணவர்கள், துறை தலைவர் செல்வகுமார் தலைமையில் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
தூண் வீரதிம்மு அம்மன் மாலைக்கோயிலில் அமைந்துள்ளது. தரை மட்டத்திலிருந்து 2.65 மீட்டர் உயரமுடையது. தரைக்குக் கீழே 4 அடி புதைந்துள்ளது. இதன் அகலம் 29 செ.மீ., கனம் 27 செ.மீ. இது நான்கு புறங்களிலும் 10 சதுரங்கள் என 40 சதுரங்களில் அழகான சிற்பங்களுடன் காணப்படுகிறது. இதன் மேலே ஒரு சிறிய நான்கு தூண்களை உடைய மண்டபம் போன்ற அமைப்பு உள்ளது. ஒவ்வொரு சதுரமும் 25 முதல் 28 செ.மீ. அகலமும், 14 முதல் 15 செ.மீ. உயர அளவில் அமைந்து சுற்றிலும் அணிவேலைப்பாடுடைய 4 முதல் 5 செ.மீ. அளவுடைய விளிம்புப்பட்டையைக் கொண்டுள்ளது.
இந்த நாற்பது சிற்பத்தொகுதிகளில், வில், அம்பு, வேல், கேடயம், வாள் ஆகியவற்றை ஏந்திய வீரர்கள், குதிரை வீரர், பெண்கள், மாடுகளுடன் புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர், பன்றி வேட்டையாடுதல் ஆகிய சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலே உள்ள சதுரத்தில் கிருஷ்ணர் சிற்பமும் சந்திரன், சூரியன் சிற்பவடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த தூண் குறித்து அந்த ஊரை சேர்ந்த 82 வயதான முதியவர் சுப்பையா கூறுகையில், இத்தூண் 300 ஆண்டுகள் பழமையானதாக இருக்க வாய்ப்புள்ளது. அத்தி மரத்தால் செய்யப்பட்டிருக்கலாம் என்றார்.
காப்பிலியக்கவுடர் சமூகத்தினர் இதைத் தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். சென்ற மாதம் கோனூரில் இதுபோன்ற ஒரு வீரக்கம்பத்தை தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்தனர். இது போன்ற மரபுச்சின்னங்களைப் தமிழ்ப் பல்கலைக்கழகம் பதிவு செய்து, தகவல் சேகரித்து ஆராய்ந்து வருவதால், பொதுமக்கள் இது போன்ற மரபுச்சின்னங்கள் குறித்து தகவல் அளிக்கலாம் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
The post திண்டுக்கல் அருகே 300 ஆண்டு பழமையான மர வீரத்தூண் தஞ்சை பல்கலை. மாணவர்கள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.