காந்திநகர்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதி பாஜக வேட்பாளரான புருஷோத்தம் ரூபாலாவை மாற்ற வேண்டும் என்ற ராஜ்புத் சமூக மக்கள் கோரிக்கை வலுக்கிறது. ராஜ்புத் சமூக ராஜாக்கள், பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் நெருக்கமாக இருந்ததாக ஒன்றிய அமைச்சர் ரூபாலா சர்ச்சையாக பேசினார். ரூபாலா சர்ச்சைப் பேச்சால் குஜராத், ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் ராஜ்புத் சமூக மக்கள் கொந்தளித்துள்ளனர்.
பாஜக வேட்பாளரின் மன்னிப்பை ஏற்க ராஜ்புத் மக்கள் மறுப்பு:
கண்டனம் வலுத்ததால் தனது பேச்சுக்காக ஒன்றிய அமைச்சர் ரூபாலா மன்னிப்பு கோரினார். ரூபாலாவின் மன்னிப்பை ஏற்க ராஜ்புத் சமூக மக்கள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டனர். ராஜ்கோட் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரூபாலாவை மாற்றிவிட்டு வேறு ஒருவரை அறிவிக்க வேண்டும் என பாஜகவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாஜகவின் சமரச பேச்சு தோல்வி:
ராஜ்புத் சங்கத்தின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த பிரநிதிகளுடன் நேற்று பாஜக தலைவர்கள் பலமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பாஜகவின் சமரசத்தை ஏற்க ஷத்ரிய சமூக சங்கங்களின் நிர்வாகிகள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.
வேட்பாளரை பாஜக மாற்ற வேண்டும் என்பதில் உறுதி:
ரூபாலாவை மாற்றுவதை தவிர வேறு எந்த சமரசத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று ஷத்ரிய சமூக தலைவர்கள் தெரிவித்திருக்கின்றனர். பாஜக வேட்பாளர் ரூபாலாவை மாற்றாவிட்டால் நாடு முழுவதும் பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்று சத்ரிய சமூக சங்கங்கள் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் பாஜகவை புறக்கணிப்போம் – ராஜ்புத் சமூகத்தினர் எச்சரிக்கை:
ரூபாலாவை மாற்றாவிட்டால் நாடு முழுவதும் வசிக்கும் 22 கோடி ராஜ்புத் பிரிவினர் பாஜகவை புறக்கணிப்பார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் சுமார் 75 லட்சம் மக்கள் உள்ள ராஜ்புத் சமூகத்தினரின் எச்சரிக்கையால் பாஜகவுக்கு நெருக்கடி முற்றுகிறது. குஜராத் மட்டுமின்றி ராஜஸ்தான், அரியானா மாநிலங்களிலும் கணிசமாக ராஜ்புத் சமூகத்தினர் உள்ளனர்.
The post குஜராத்தில் பாஜகவுக்கு நெருக்கடி!: ஒன்றிய அமைச்சர் ரூபாலாவின் மன்னிப்பை ஏற்க ராஜ்புத் மக்கள் மறுப்பு.. நாடு முழுவதும் பாஜகவை புறக்கணிப்போம் என வார்னிங்..!! appeared first on Dinakaran.