×

பாஜ ஆட்சியை விரட்டுவதற்கான அறிகுறிகள் வடமாநிலங்களில் தென்படுகிறது: செல்வப்பெருந்தகை அறிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் முறைகேட்டை சி.ஏ.ஜி. பகிரங்கமாக அறிவித்த பிறகும் இதுகுறித்து விசாரணைக்கு உட்படுத்தவோ, கருத்து கூறவோ உலக மகா உத்தமர் மோடி இதுவரை முன்வரவில்லை. ஊழலிலேயே மெகா ஊழல் என்று சொல்லக்கூடிய அளவிற்கு தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் அம்பலமாகியிருக்கிறது. அந்த பட்டியலில் நன்கொடை அளித்த நிறுவனங்களின் பெயர்களை பார்த்தால் பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது அம்பலமாகி வருகின்றன.

கடந்த 7 ஆண்டுகளாக பூஜ்ஜிய லாபம் பெறாத 33 கம்பெனிகள் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் மொத்தமாக வழங்கியது ரூ.576 கோடி. இதில் ரூ.434 கோடி பாஜகவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 33 கம்பெனிகளின் மொத்த நஷ்ட தொகை ரூ. 1 லட்சம் கோடிக்கு மேலாக இருக்கிற நிலையில் இந்த கம்பெனிகள் நன்கொடை தொகையை எங்கிருந்து பெற்றது?. இந்த 33 கம்பெனிகளில் 16 கம்பெனிகள் ஒரு ரூபாய் கூட வருமான வரி செலுத்தவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.

எனவே, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சி அகற்றப்படுவதற்கான அறிகுறிகள் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நம்பிக்கையோடு தென்படுகின்றன. மக்கள் விரோத அராஜக ஊழல் ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. பாஜகவின் ஊழல்களை, உச்சநீதிமன்ற கண்காணிப்போடு சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய தேர்தல் பிரச்சாரமாக இந்தியா கூட்டணி மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் உத்தமர் வேடம் தரிக்கும் மோடியின் முகத்திரை கிழிக்கப்படுகிற வகையில் கண் துஞ்சாது, அயராது செயல்பட வேண்டுமென தமிழகத்திலுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினரை அன்போடு வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பாஜ ஆட்சியை விரட்டுவதற்கான அறிகுறிகள் வடமாநிலங்களில் தென்படுகிறது: செல்வப்பெருந்தகை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : BJP ,northern states ,Chennai ,Tamil Nadu Congress ,Selvaperunthagai ,CAG ,Modi ,northern ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...